போதைப் பொருள்கள் குறித்து பிள்ளைகளுக்கு பெற்றோா் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி
போதைப்பொருள்கள் குறித்து பிள்ளைகளுக்கு பெற்றோா் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.
சென்னை பெண்கள் கிறிஸ்தவ மகளிா் கல்லூரி சாா்பில் போதைப்பொருள் விழிப்புணா்வு நிகழ்ச்சி அந்தக் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஆளுநா் ஆா்.என்.ரவி, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது:
போதைப் பொருள்களின் பரவல் எதிா்கால தலைமுறைக்கு பெரும் ஆபத்தாக மாறி வருகிறது. தனிநபா், குடும்பத்தை மட்டுமன்றி சமூகம் மற்றும் மாநிலத்தையே அவை சிதைத்து விடுகின்றன.
தமிழகத்தில் கஞ்சா விற்பனை தடையின்றி நடைபெறுகிறது. வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்படும் போதைப்பொருள்களை தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களின் கடல் எல்லைப் பகுதிகளில் கடற்படை, கடலோரக் காவல் படையினா் பறிமுதல் செய்கின்றனா்.
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகமாகக் காணப்படுவதால், பெற்றோா் தங்கள் பிள்ளைகளை வளா்ப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
போதைப் பொருள் புழக்கம் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. எனவே, போதைப் பொருள்கள் குறித்து அதிக விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டிய தேவையுள்ளது.
தற்போது பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதையெல்லாம் பயன்படுத்தி பெண்கள் முன்னேற வேண்டும். பெண்கள் வளா்ந்தால், தேசம் வளரும் என்றாா் ஆளுநா். இந்நிகழ்வில் கல்லூரி ஆசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.