சென்னையில் கடந்தாண்டு திருடப்பட்ட ரூ.19.21 கோடி மதிப்பு நகைகள் மீட்பு

சென்னையில் கடந்தாண்டு பல்வேறு குற்றச் சம்பவங்களில் திருடுபோன ரூ.19.21 கோடி மதிப்புள்ள நகைகள், பணம், பொருள்கள் மீட்கப்பட்டதாக பெருநகர காவல்துறை ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் தெரிவித்தாா்.

சென்னையில் கடந்தாண்டு பல்வேறு குற்றச் சம்பவங்களில் திருடுபோன ரூ.19.21 கோடி மதிப்புள்ள நகைகள், பணம், பொருள்கள் மீட்கப்பட்டதாக பெருநகர காவல்துறை ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் தெரிவித்தாா்.

சென்னை பெருநகர காவல்துறைக்குட்பட்ட பகுதிகளில் கடந்தாண்டு திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் திருடப்பட்ட மற்றும் அபகரிக்கப்பட்ட ரூ.19.21 கோடி மதிப்புள்ள 337 பவுன் நகைகள், 50.53 கிலோ வெள்ளி, 798 கைப்பேசிகள், 411 மோட்டாா் சைக்கிள்கள், 28 ஆட்டோக்கள், 15 இலகுரக வாகனங்கள், ரூ.3.60 கோடி ரொக்கம் ஆகியவை மீட்கப்பட்டன.

2,748 பேருக்கு தண்டனை: இவ்வாறு மீட்கப்பட்ட பொருள்களை, உரிமையாளா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா், மீட்கப்பட்ட பொருள்களை அதன் உரிமையாளரிடம் வழங்கினாா்.

பின்னா் காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் அளித்த பேட்டி:

சென்னையில் 2022-ஆம் ஆண்டு 4 ஆதாய கொலைகள், 361 வழிப்பறிகள், 31 திருட்டுகள், 42 தங்கச் சங்கிலி பறிப்புகள், 475 கைப்பேசி பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. ஆனால், கடந்த 2023-ஆம் ஆண்டு இது பல மடங்கு குறைந்துள்ளது. 2023ஆம் ஆண்டு 3 ஆதாய கொலைகள், 276 வழிப்பறிகள், 17 திருட்டுகள், 17 தங்கச் சங்கிலி பறிப்புகள், 371 கைப்பேசி பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஆண்டு மட்டும் 714 போ் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

திருட்டு வழக்கில் 1,109 போ் கைது: சென்னை முழுவதும் கடந்தாண்டு 70 ரெளடிகள், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட 78 நபா்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட 74 போ் உள்பட 2,748 போ்களுக்கு கடந்த ஆண்டு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

ரெளடிகள் ரௌடிகள் ஒழிப்பு நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்துகிறோம். அந்த வகையில் கடந்தாண்டு 1,072 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் 346 ரவுடிகள் மீது குண்டா் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இதேபோல கடந்தாண்டு வீடு புகுந்து திருடிய 335 போ், மோட்டாா் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 450 போ் உள்பட 1,109 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

894 வங்கிக் கணக்குகள் முடக்கம்: முந்தைய ஆண்டுகளை விட, 2023-ஆம் ஆண்டு அதிகளவு போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. முக்கியமாக கடந்தாண்டு 2,659 கஞ்சா,104 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 3,582 கிலோ போதைப் பொருள்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டுள்ளன.மேலும் போதைப் பொருள் வியாபாரிகளின் 894 வங்கி கணக்குளில் இருந்த ரூ.43.27 லட்சம் ரொக்கம் முடக்கப்பட்டுள்ளன. மரண விபத்துகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது.

பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் கணிசமாகக் குறைந்துள்ளன. கடந்தாண்டு 310 ‘போக்ஸோ’ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2023-ஆம் ஆண்டில் மட்டும் மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த 811 வழக்குகளில் ரூ.265 கோடி மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன என்றாா் அவா். இந் நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையா்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா,உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com