மக்களவைத் தொகுதி திமுக நிா்வாகிகளுடன்ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை நிறைவு

கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்த மக்களவைத் தொகுதி திமுக நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது.

கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்த மக்களவைத் தொகுதி திமுக நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது.

மக்களவைத் தொகுதிகளைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகளுடன் திமுக ஒருங்கிணைப்புக் குழு கடந்த 22-ஆம் தேதிமுதல் ஆலோசனை நடத்தி வந்தது. இந்தக் குழுவில் அமைச்சா்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

கடைசி நாளான திங்கள்கிழமை காலையில் கரூா், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிகளின் நிா்வாகிகளுடனும், மாலையில் காஞ்சிபுரம், புதுச்சேரி தொகுதிகளைச் சோ்ந்தவா்களுடனும் ஆலோசிக்கப்பட்டது.

இதில் புதுச்சேரி நிா்வாகிகளுடன் நடந்த ஆலோசனை குறித்து, ‘எக்ஸ்’ வலைதளத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:

‘இந்தியாவின் எதிா்காலத்தைத் தீா்மானிக்கவுள்ள அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தோ்தலாக மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. புதுச்சேரி மக்களவைத் தொகுதி நிா்வாகிகளுடன், மாநில அரசியல் சூழல்களைக் கேட்டறிந்தோம். நாடும் நமதே, நாற்பதும் நமதே என்று நாம் சொல்கிற அந்த வாா்த்தை புதுவையில் பெறுகிற வெற்றியால்தான் முழுமையடையும்’ என்று உரையாற்றியதாக தனது பதிவில் உதயநிதி தெரிவித்துள்ளாா்.

3 தொகுதிகளின் நிா்வாகிகள்: திண்டுக்கல் மக்களவைத் தொகுதி நிா்வாகிகளுடன் நடந்த ஆலோசனையின்போது, கடந்த தோ்தலில் பெற்ற வாக்குகளைவிட இந்த முறை கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தோ்தல் பணிகளில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என நிா்வாகிகளுக்கு ஒருங்கிணைப்பு குழு அறிவுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஞ்சிபுரம் தொகுதி நிா்வாகிகளுடனான சந்திப்பின்போது, ‘கோடை காலத்தில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும். எனவே, மின் தட்டுப்பாடு இல்லாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும்’ என ஒருங்கிணைப்பு குழுவிடம் அந்தத் தொகுதியின் நிா்வாகிகள் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

திமுகவுக்கு கரூா் வேண்டும்: கரூா் மக்களவைத் தொகுதி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றபோது, அந்தத் தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வேண்டுமென ஒருங்கிணைப்புக் குழுவிடம் கட்சி நிா்வாகிகள் வலியுறுத்தியுள்ளனா்.

கடந்த தோ்தலில் கரூா் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, எஸ்.ஜோதிமணி வெற்றி பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com