1,251 மருத்துவர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்  மூலம் மேலும் 1,251 மருத்துவர் பணியிடங்களை நிரப்ப அடுத்த ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1,251 மருத்துவர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் மேலும் 1,251 மருத்துவர் பணியிடங்களை நிரப்ப அடுத்த ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 1,021 மருத்துவர்  பணியிடங்களுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்ற மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது: 
மருத்துவத் துறையில் காலி பணியிடங்களை நிரப்புவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. பல்வேறு நீதிமன்ற வழக்குகளைக் கடந்தே பணியிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது.
அந்த வகையில், வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 1,021 மருத்துவர்களுக்கான பணிநியமன ஆணைகள் வழங்குவதுதான் தற்போதைய சாதனையாகக் கருதுகிறேன்.
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 2,905 மருத்துவப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
6000 பணியிடங்கள்: பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை இயக்குநரகத்தில் 1,251 மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வார காலத்துக்குள் அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. அந்த பணியிடங்களில், கரோனா காலங்களில் பணியாற்றியவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும். 
அதேபோன்று 983 மருந்தாளுநர் பணியிடங்கள்,  1,266 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள், 2,271 கிராமிய சுகாதார செவிலியர் பணியிடங்கள், 350 ஆய்வக நுட்பநர் பணியிடங்கள் என 6 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன.
தமிழகத்தில் 45 சுகாதார மாவட்டங்கள் உள்ளன. அதில், 20 சுகாதார மாவட்டங்களில் தான் அதிக காலிப்பணியிடங்கள் உள்ளன. தமிழக சுகாதாரத்துறையில் ஒப்பளிக்கப்பட்ட பணியாளர்கள் எண்ணிக்கை 22,447}ஆக உள்ளது. 
கடந்த இரண்டரை ஆண்டுகளில் இதுவரை 11,215 மருத்துவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ சேமநல நிதி கடந்த அரசில் ரூ. 50 லட்சமாக இருந்தது. அது ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டு 12 குடும்பங்களுக்கு இன்றைக்கு மருத்துவ சேமநலநிதி 12 பேருக்கு தலா ரூ.1 கோடி என்கின்ற வகையில் 5 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மருத்துவர் கே.நாராயணசாமி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் 
தி.சி.செல்வவிநாயகம், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com