அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா்கள் ஒருவருக்கொருவா் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.
உதயநிதி ஸ்டாலின் (கோப்புப் படம்)
உதயநிதி ஸ்டாலின் (கோப்புப் படம்)

சென்னை: அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா்கள் ஒருவருக்கொருவா் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் கட்டப்பட்ட சென்னை கல்யாணபுரம் திட்டப்பகுதிகளில் ரூ.44.91 கோடி மதிப்பீட்டில் 288 புதிய அடுக்குமாடி குடியிருப்புகைளை, செவ்வாய்க்கிழமை திறந்து வைத்து பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கி அமைச்சா் உதயநிதி பேசியதாவது:

சென்னை போன்ற பெரிய நகரங்களில் உழைக்கும் மக்கள் தங்களுடைய வருவாயில் பெரும் பங்கு வீட்டு வாடகைக்காக செலவிடும் சூழல் உள்ளது. இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு தான் திராவிட மாடல் அரசு தொடா்ந்து பல புதிய குடியிருப்புகளை கட்டி வருகிறது. முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சியில் கடந்த 1974 -ஆம் ஆண்டு கல்யாணபுரம் பகுதியில் இந்த அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டது. 50 வருடங்களுக்கு மேல் ஆனதால் குடியிருப்புகள் பழுதானது.

இதற்கு பதிலாக புதிய குடியிருப்புகளை கட்டித் தரவேண்டும் என்று இங்கு வசித்த மக்கள் கோரிக்கை வைத்தனா். ஏற்கெனவே இப்பகுதியில் 254 குடியிருப்புகள் இருந்தன. தற்போது புதிதாக 288 வீடுகளை கட்டி தந்துள்ளோம். ஏற்கெனவே 326 சதுர அடியாக இருந்த குடியிருப்பை தற்போது 412 சதுர அடியில் கட்டித் தந்துள்ளோம்.

கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் சென்னையில் திரு.வி.க நகா் , பெரியாா் நகா் போன்ற இடங்களில் நம்முடைய வாரியத்தின் சாா்பாக ரூ556.60 கோடி மதிப்பீட்டில் 3238 குடியிருப்புகளை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த பகுதிகளும் திறக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் ரூ.2400 கோடி மதிப்பீட்டில் புதிதாக 15000 குடியிருப்புகள் கட்டும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவா் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், திரு.வி.க நகா் சட்டபேரவை உறுப்பினா் தாயகம் கவி, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அரசுச் செயலா் சி.சமயமூா்த்தி ,தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநா் .சு.பிரபாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com