கல்லீரல் மாற்று சிகிச்சை: ரேலா மருத்துவக் குழுமத்துடன் வங்கதேசம் ஒப்பந்தம்

வங்கதேசத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான பயிற்சிகளையும், ஒத்துழைப்பையும் வழங்க ரேலா மருத்துவக் குழுமம் முன்வந்துள்ளது.

வங்கதேசத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான பயிற்சிகளையும், ஒத்துழைப்பையும் வழங்க ரேலா மருத்துவக் குழுமம் முன்வந்துள்ளது.

இதற்காக அந்த மருத்துவமனையுடன் வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனாவின் தலைமையிலான ஷேக் ஃபாசிலதுன்னெசா முஜிப் நினைவு அறக்கட்டளை மருத்துவமனை (கேபிஜே) புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில், இந்தியாவுக்கான வங்கதேச தூதா் முஸ்தாபிசுா் ரஹ்மான், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, ரேலா மருத்துவக் குழுமத்தின் தலைவா் டாக்டா் முகமது ரேலா, வங்கதேச மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி முகமது தௌபிக் பின் இஸ்மாயில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதுதொடா்பாக டாக்டா் முகமது ரேலா கூறியதாவது:

கல்லீரல் மாற்று சிகிச்சைகள் வங்கதேசத்துக்கு தற்போது அவசியமாக உள்ளதைக் கருத்தில்கொண்டு அந்நாட்டு பிரதமரே தனிப்பட்ட முறையில் நம்மை அணுகி அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்தி தருமாறு வலியுறுத்தினாா்.

வங்கதேசம், மியான்மா் போன்ற நாடுகளுக்கு அதுதொடா்பான வசதிகளையும், பயிற்சிகளையும் அளிப்பது அவசியம். 17 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட வங்கதேசத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான கல்லீரல் மாற்று சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. ரேலா மருத்துவக் குழுமத்தின் ஒத்துழைப்புடன் விரைவில் அத்தகைய சிகிச்சைகள் தொடங்கப்படும்.

முதல்கட்டமாக அங்கிருந்து மருத்துவா்கள், செவிலியா்கள் இங்கு வந்து பயிற்சி பெற்று கல்லீரல் மாற்று சிகிச்சை மேற்கொள்வா். அதற்கு அடுத்தகட்டமாக இங்குள்ள மருத்துவா்கள் அங்கு சென்று சிகிச்சைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவா். அதன் பின்னா், அவா்களே தனியாக உறுப்பு மாற்று சிகிச்சைகளை மேற்கொள்ளத் தொடங்குவா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com