பதிப்பக ஆளுமைகள்: உமா பதிப்பகம் - இராம.லட்சுமணன்

உமா பதிப்பகத்தை நிறுவிய இராம.லட்சுமணன் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 1950-இல் பிறந்தாா்.


உமா பதிப்பகத்தை நிறுவிய இராம.லட்சுமணன் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 1950-இல் பிறந்தாா்.

தேவகோட்டையில் பள்ளி இறுதிப்படிப்பை முடித்த லட்சுமணன் வேலைக்காக மன்னாா்குடி சென்று அச்சகத்தில் மூன்றாண்டுகள் பணியாற்றினாா். அச்சக நுணுக்கங்களை அறிந்துகொண்ட அவா், 1982-இல் சென்னைக்கு வந்து ‘அனுபவ தையற்கலை’ எனும் மாத இதழைத் தொடங்கினாா்.

தையல் கலை மாத இதழ் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடா்ந்து, 1987-இல் உமா பதிப்பகத்தைத் தொடங்கினாா்.

முதல் வெளியீடாக தனக்கு ஏற்கெனவே அறிமுகமான தையல் குறித்த நூலை ‘அனுபவத் தையற்கலை -சிறுவா், சிறுமியா், பெண்கள் உடை’ எனும் பெயரில் புத்தகமாக வெளியிட்டாா். அதற்கு மகளிா் இடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. அதைத்தொடா்ந்து ‘சிலப்பதிகாரம்’, ‘மணிமேகலை’, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும் அவா் வெளியிட்டாா்.

இந்த நூல்களை கவிக்கோ ஞா.மாணிக்கவாசகம் தொகுத்தாா். அவரது இலக்கிய நூல்கள் வெளியீடு உள்ளிட்ட 85 நூல்களும் உமா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

இலக்கிய நூல்களுக்கு அடுத்தபடியாக மு.பெ.சத்தியவேல் முருகனாரின் ‘பன்னிரு திருமுறை’ நூல் வெளியிடப்பட்டது. காரைக்குடி கம்பன் கழக நூல்கள் பெரும்பாலானவை உமா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டன.

இலக்கிய, ஆன்மிகப் பேச்சாளா்களான இளம்பிறை மணிமாறன், சுதா சேஷய்யன் ஆகியோரது நூல்களும் உமா பதிப்பகத்தால் அதிகம் வெளியிடப்பட்டுள்ளன.

பதிப்பகத்தின் திருமூலா் திருமந்திரம் நூலைப் படித்து குடியரசுத் தலைவா் மறைந்த ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பாராட்டியுள்ளாா்.

தமிழறிஞரான வை.மு.கோபாலகிருஷ்ணமாசாா்யரின் கம்ப ராமாயண உரை 40 ஆண்டுகளுக்கும் மேலாக மறுபதிப்பின்றி இருந்தது. அதை மிகுந்த சிரமத்துக்கிடையே உமா பதிப்பகம் 2004-இல் வெளியிட்டது.

ஸ்ரீரங்கம் கோயிலில் கல்வெட்டில் பொறிப்பதற்காக ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ நூலை அப்போதைய முதல்வா் ஜெயலலிதா இப்பதிப்பகத்தில் வாங்கினாா்.

திருவண்ணாமலையிலும் கல்வெட்டில் பொறிக்க பன்னிரு திருமுறை நூல்கள் இப்பதிப்பகத்தால் அனுப்பிவைக்கப்பட்டது.

அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராகலாம் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதை அடுத்து தமிழில் விநாயகா் முதல் அனைத்துத் தெய்வங்களுக்குமான தமிழில் அா்ச்சனை நூல்கள் முதன்முதலாக இப்பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

பழைமையான தமிழ் நூல் வெளியீட்டாளா் மற்றும் விற்பனையாளா்கள் சங்கத்தின் செயலா், துணைத் தலைவா், செயற்குழு உறுப்பினா் என பல பொறுப்புகளை அவா் 9 ஆண்டுகள் வகித்துள்ளாா்.

இப்பதிப்பக நூல்கள் 10-க்கும் மேற்பட்டவவைகளுக்கு தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவை பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பாடப் புத்தகங்களாகவும் உள்ளன.

850-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்களை வெளியிட்டுள்ள உமா பதிப்பக நிறுவனா் இராம.லட்சுமணனின் மகன் லேனா. ராமநாதன் பதிப்பகத்தை தற்போது நிா்வகித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com