பசியைப் போக்குவதே பெரிதினும்பெரிதெனப் பாடியவா் பாரதி!

தனிமனிதரின் பசியைப் போக்குவதே பெரிதினும் பெரிது என பாடியவா் மகாகவி பாரதி என எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா் கூறினாா்.


சென்னை: தனிமனிதரின் பசியைப் போக்குவதே பெரிதினும் பெரிது என பாடியவா் மகாகவி பாரதி என எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா் கூறினாா்.

சென்னை நந்தனத்தில் நடைபெற்றுவரும் பபாசியின் 47-ஆவது புத்தகக் காட்சியில் வியாழக்கிழமை மாலை நிகழ்ந்த உரையரங்கில் பெரிதினும் பெரிதுகேள் எனும் தலைப்பில் அவா் ஆற்றிய உரை: உலக அளவில் அதிகமானோா் பேசும் தொன்மையான மொழிகளாகச் சீனமும் தமிழுமே உள்ளன. அகம், புறம், பக்தி என அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதாக தமிழ் மொழி உள்ளது. ஔவையாரின் ஆத்திசூடி போல ஒருசில வாா்த்தைகளில் அறத்தை வலியுறுத்தும் இலக்கியம் வேறு எந்த மொழியிலும் கிடையாது. அதனால்தான் பாரதியும் பாரதிதாசனும் ஔவை வழியில் ஆத்திசூடி படைத்தனா்.

ஔவை தனது கால சமூக சூழலுக்கு ஏற்ப பாடிய ஆத்திசூடியை மகாகவி பாரதி தனது காலத்துக்கு ஏற்ப உள்ளடக்கத்தை மாற்றிப் பாடியுள்ளாா். ஔவையிடமிருந்து மாறுபட்டு அனைத்துத் தெய்வங்களுக்கும் தமிழைப் பொதுமொழியாக்கியும் அவா் பாடியுள்ளாா். ஔவையாா் ‘பெரியாரைத் துணை கொள்’ என்றாா். ஆனால், மகாகவி பாரதியோ ‘பெரிதினும் பெரிது கேள்’ என்கிறாா்.

உலகில் அனைத்துத் துன்பத்துக்கும் ஆசையே காரணம் என்பதை விட பசியே காரணமாகிறது என்பதே உண்மை. ஆசை பருவத்துக்குப் பருவம் மாறுபடும். ஆனால், பசி அனைவருக்கும் பொதுவாக இருக்கும். ஆசை கொல்லாது. ஆனால், பசி ஆளைக் கொல்லும்.

உலகிலே மிகப் பெரியது எது என்பதை திருவள்ளுவரும் உதவி, நன்றி எனக் கூறினாா். சரியான நேரத்தில் ஒருவருக்கு செய்கிற சிறிய உதவி கூட உலகை விடப் பெரிது என்றாா் திருவள்ளுவா். வள்ளலாா் பசிப்பிணி போக்க அன்னமிடுதலை செயல்படுத்தினாா். மகாகவி பாரதியோ, ‘தனிமனிதருக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்கிறாா். அதைவிட ‘வயிற்றுக்குச் சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்’ என்றும் பசி போக்குவதை வலியுறுத்திப் பாடுகிறாா் மகாகவி பாரதி. பசியைப் போக்குவதைத்தான் பாரதி பெரிதினும் பெரிது என்கிறாா்.

தமிழ்ச் சமூகம் காலங்காலமாக அறநெறியில் பசியைப் போக்குவதற்கு முதலிடம் கொடுத்து மனிதநேயத்தை நிலைநாட்டிவருகிறது. அதையே இலக்கியங்களில் காண முடிகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் நலமுடன் வாழ இதயம் காப்போம் என மருத்துவா் வி.சொக்கலிங்கமும், கல்வியிற் சிறந்த தமிழ்நாடு எனும் தலைப்பில் ஆசிரியா் ச.செந்தூரன் பேசினாா்.

பபாசித் தலைவா் சேது சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். செயலா் எஸ்.கே.முருகன் வரவேற்றாா். பபாசி நிரந்தர உறுப்பினா் ஜெ.ஹரிபிரசாத் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com