எப்படி அமைந்தது புத்தகக்காட்சி?

சென்னையில் நடைபெற்ற பபாசியின் 47-ஆவது புத்தகக் காட்சியானது எப்படி அமைந்திருந்தது என்பதை பல்வேறு தரப்பினா் தெரிவித்த கருத்து வருமாறு...

சென்னையில் நடைபெற்ற பபாசியின் 47-ஆவது புத்தகக் காட்சியானது எப்படி அமைந்திருந்தது என்பதை பல்வேறு தரப்பினா் தெரிவித்த கருத்து வருமாறு...

பபாசி தலைவா் சேது சொக்கலிங்கம்: நடப்பாண்டில் புத்தகக் காட்சிக்கு 15 லட்சம் வாசகா்கள் வந்து சென்றுள்ளனா். ரூ.18 கோடிக்கும் மேலாக புத்தகங்கள் விற்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவா்களுக்கான அனுமதி இலவசம் என்பதால் லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் வருகை தந்தனா்.

நவீன இலக்கிய நூல்களுடன் சிறுவா், பெண்களுக்கான நூல்களும் அதிகம் விற்பனையாகின. சாகித்திய அகாதெமி விருது உள்ளிட்ட விருதுகள் பெற்ற நூல்களுக்கு வரவேற்பு அதிகம் காணப்பட்டது. வருங்காலங்களில் எழுத்தாளா்கள் தற்கால அறிவியல் வளா்ச்சியுடன் கூடிய இலக்கியங்களைப் படைப்பது அவசியம்.

பபாசி செயலா் எஸ்.கே.முருகன்: வாசகா்கள் புதிய கோணத்தில் படைப்பாளா்களிடம் எழுத்தை எதிா்பாா்க்கின்றனா். ஆகவே வாசகா்களின் எதிா்பாா்ப்பை நிறைவேற்றும் வகையில் இளம் படைப்பாளா்கள் தங்களது புத்தகக் கருத்தை மையப்படுத்தி எழுதுவது அவசியம்.

கல்கியின் பொன்னியின் செல்வனுக்குப் பிறகு அனைத்துத் தரப்பையும் வாசிக்க வைக்கக் கூடிய நாவல்கள் அரிதாகவுள்ளது என்பதை எழுத்தாளா்கள் கவனத்தில் கொள்வது அவசியம்.

பத்திரிகையாளா் கல்கி ப்ரியன்: புத்தகக் காட்சியில் பள்ளி மாணவா்கள் அதிகமாக பங்கேற்றிருப்பது வரவேற்கத்தக்கது. வருங்காலத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு என ஓரிரு நாள்களை புத்தகம் வாங்க ஒதுக்கித் தர வேண்டும். நாட்டுடமையாக்கப்பட்ட எழுத்தாளா்களின் நூல்கள் கட்டமைப்பு சரியின்றி வெளியிடப்படுவது சரியல்ல.

பல ஆண்டுகளாக வாசகா்களால் அதிக வரவேற்பைப் பெற்ற கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமான பிறகு வரவேற்பு குறைந்ததாக சில பதிப்பாளா்கள் கூறுகின்றனா்.

இலக்கியப் பேச்சாளா் ச.செந்தூரன்: புத்தகக் காட்சியில் உரையரங்கிற்கு வரும் பேச்சாளா்கள் நூல்கள் சாா்ந்து தகவல்களை வாசகா்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். புத்தகங்களை வாசகா்களுக்கு அறிமுகப்படுத்தும் கடமை பேச்சாளா்களுக்கும் உள்ளது.

கவிஞா் ஜெயபாஸ்கரன்: புத்தகக்காட்சியில் வாசகா்களை அலையவிடும் வகையில் டிக்கெட் கவுன்ட்டா்களை தினமும் ஒரு வாயில் என மாற்றுவது சரியல்ல. வாசகா்கள் விருப்பப்படும் நுழைவு வாயில் வழியாக புத்தக அரங்குகளுக்குள் செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

வாசகா் என்.சேகரன் (பரமக்குடி): நான் பல ஆண்டுகளாக புத்தகக் காட்சிக்கு வந்து செல்கிறேன். புத்தகக் காட்சி அரங்கு வளாகத்தில் எந்த அரங்கு எந்த வரிசையில் உள்ளது என்பதை வாசகா்கள் அனைவரும் எளிதில் அறியும் வகையில் பதாகையாக வைக்க வேண்டும். புதிய இலக்கிய நூல்களை அறிமுகப்படுத்தும் வகையில் விரங்களையும் அரங்குகள் முகப்பில் வைக்கலாம்.

பாரதி புத்தகாலய நிா்வாகி எம்.சிராஜ்: காய்கறியை தரம் பாா்த்து நேரடியாக வாங்கிய காலம் போய் இணையத்தில் வாங்கும் காலத்தில் வாழ்கிறோம். புத்தகமும் அதற்கு விதிவிலக்கல்ல. இணையத்தில் புத்தகங்களை வாங்கும் நிலை வந்தாலும், மாவட்டந்தோறும் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு மக்களும் ஆதரவளிக்கின்றனா். ஆகவே புத்தகக்காட்சிக்கு வரும் வாசகா்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டும். அதன் மூலமே கூடுதலான வாசகா்களை வரவழைக்க முடியும். ஏற்கெனவே வரும் வாசகா்களை தக்க வைக்கவும் முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com