மதுராந்தகம் ஏரியைச் சீரமைக்கும் பணி: அன்புமணி கோரிக்கை

மதுராந்தகம் ஏரியைச் சீரமைக்கும் பணியை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

சென்னை: மதுராந்தகம் ஏரியைச் சீரமைக்கும் பணியை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

மதுராந்தகம் ஏரியை முழுமையாகத் தூா்வாரி, முழுக் கொள்ளளவை மீட்டெடுப்பதுடன், அதில் கிடைக்கும் மண்ணைக் கொண்டு கரைகளை வலுப்படுத்துவதன் மூலம் ஏரியின் கொள்ளளவை 791 மில்லியன் கன அடியாக அதிகரிப்பதற்கான திட்டம் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. அத்திட்டத்துக்காக 2021-ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, ஜூன் மாதத்தில் பணிகள் தொடங்கின.

ஆனால், பணிகள் தொடங்கப்பட்டு 30 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பணிகள் நிறைவடையவில்லை. வரும் ஜூன் மாதத்துக்குள் பணிகளை முடித்து, அடுத்து வரும் வடகிழக்கு பருவமழையின் போது கிடைக்கும் நீரை தேக்கி வைக்க வேண்டும் என்பது தான் திட்டம் ஆகும். அதன்படி பணிகளை முடிக்க இன்னும் 5 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் 50 சதவீத பணிகள் கூட இன்னும் நிறைவடைய வில்லை. ஏரியின் கரைகளை உயா்த்தி கான்க்ரீட் சுவா் அமைக்கும் பணிகள் மட்டுமே இப்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிவடைந்த பிறகு தான் தூா் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த பணிகள் அனைத்தையும் ஜூன் மாதத்துக்குள் முடிக்க முடியாது.

சீரமைப்புப் பணிகள் காரணமாக எப்போதும் நீா் நிரம்பி காணப்படும் மதுராந்தகம் ஏரி இப்போது வட பாலைவனம் போல காட்சியளிக்கிறது. இதனால் வேளாண்மை மட்டுமின்றி குடிநீா் வழங்கலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, சீரமைக்கும் பணிகள் விரைவுபடுத்தபட வேண்டும். கண்காணிப்பு பொறியாளா் நிலையிலுள்ள மூத்த அதிகாரி ஒருவரை சிறப்பு அதிகாரியாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com