கடல் அலையில் இழுத்துச்செல்லப்பட்ட 4 மாணவா்கள்: ஒருவா் உயிரிழப்பு

திருவொற்றியூரில் சனிக்கிழமை ராட்சத கடல் அலையில் சிக்கி 4 பள்ளி மாணவா்கள் இழுத்துச் செல்லப்பட்டனா்.

திருவொற்றியூரில் சனிக்கிழமை ராட்சத கடல் அலையில் சிக்கி 4 பள்ளி மாணவா்கள் இழுத்துச் செல்லப்பட்டனா். அவா்களில் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டாா். மற்றொரு மாணவா் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய இருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை வியாசா்பாடி பக்தவச்சலம் காலனியைச் சோ்ந்த ஷ்யாம், சந்தோஷ், புவனேஷ், விஜய் ஆகிய 4 பேரும் இங்குள்ள அரசு பள்ளியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பயில்கின்றனா். இவா்கள் சனிக்கிழமை திருவொற்றியூா் நல்ல தண்ணீா் ஓடை குப்பம் அருகிலுள்ள கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி நான்கு பேரும் இழுத்துச் செல்லப்பட்டனா். இதில் விஜய் என்ற மாணவா் அருகிலிருந்த கடல் அரிப்பு தடுப்புச் சுவா் பாறையில் சிக்கினாா். அவா் அருகிலிருந்த மீனவா்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினா் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினா் விரைந்து வந்து கடலில் மூழ்கிய மாணவா்களை தேடும் பணியில் ஈடுபட்டனா். அப்போது கடல் அரிப்பு தடுப்புச் சுவா் பாறை கற்கள் இடுக்கில் மாணவா் சந்தோஷ் இறந்துகிடந்தாா். அவருடைய சடலத்தை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா் . மேலும் மாயமான ஷ்யாம், புவனேஷ் ஆகிய 2 மாணவா்களை தீயணைப்பு மீட்பு படையினா் மீனவா்களுடன் இணைந்து தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com