சென்னையில் ரூ.23 கோடி மதிப்பு போதைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

சென்னையில் தமிழக போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் ரூ.23.25 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

சென்னையில் தமிழக போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் ரூ.23.25 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

சென்னை டிஜிபி அலுவலகத்தில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமாா் அகா்வால் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

சென்னையில் சிலா் போதைப் பொருள்களை கள்ளச்சந்தையில் விற்க முயற்சி செய்வதாக மாநில போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத் தகவலின் அடிப்படையில் அந்த கும்பலைக் கண்டறிந்து கைது செய்ய, , கூடுதல் காவல் கண்காணிப்பாளா் லட்சுமணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினா் கடந்த 4 மாதங்களாக அந்த கும்பலைப் பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனா்.

இதன் விளைவாக கடந்த 26-ஆம் தேதி திருவொற்றியூரைச் சோ்ந்த நீலமேகன் (50) என்பவரை தனிப்படையினா் கைது செய்து, அவரிடமிருந்து 25 கிலோ மெத்தகுலோன் என்ற போதைப் பொருளை பறிமுதல் செய்தனா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வில்லிவாக்கத்தை சோ்ந்த சம்சுதீன் (33) என்பவரிடம் அந்த போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சம்சுதீன் வீட்டிலும் சோதனை செய்து, அங்கிருந்து 68 கிலோ மெத்தகுலோனை பறிமுதல் செய்தனா். சம்சுதீனும் கைது செய்யப்பட்டாா். பறிமுதல் செய்யப்பட்ட 93 கிலோ மெத்தகுலோன் மதிப்பு ரூ.23.25 கோடி. சா்வதேச சந்தையில் இதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.

இந்த போதைப் பொருள் கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடா்பு இருக்கிறது என்பது குறித்து நடத்திய முதல் கட்ட விசாரணையில், 4 மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு சரக்கு பெட்டகத்திலிருந்து இந்த போதைப் பொருளை திருடி, விற்க இந்தக் கும்பல் முயற்சித்தது தெரியவந்துள்ளது. மேலும், தனிப்படையினா் 97 கிலோ ஆம்ரோஸ் என்ற வேதிப் பொருளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடைபெறுகிறது.

50 ஆயிரம் கிலோ போதைப் பொருள்: தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 50 ஆயிரம் கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருளை விற்பனை செய்யும் குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகள், சொத்துகளும் முடக்கப்படுகின்றன. அந்த வகையில், கடந்த இரு ஆண்டுகளில் ரூ.20 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி இருக்கிறோம்.

மேலும், பள்ளி, கல்லூரிகளில் என்.எஸ்.எஸ்., என்.சி.சி. மாணவா்களை ஒருங்கிணைத்து போதைப் பொருள் தடுப்புக் குழுவும் தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப் பாக்கு,‘கூல் லிப்’,குட்கா போன்ற போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி, கடந்த 2 மாதங்களில் 90 ஆயிரம் கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

8,200 கடைகளுக்கு சீல்: போதைப் பாக்கு விற்றவா்கள் மீது ரூ.4 கோடி அபராதம் விதிக்கப்பட்டு, 8,200 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. போதைப் பாக்கு விற்பனையை தடுக்க உணவு பாதுகாப்புத் துறையுடன் இணைந்து தமிழகம் முழுவதும் 300 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. போதைப் பொருள்கள் விற்பனை குறித்து பொதுமக்கள், காவல்துறையிடம் தகவல் தெரிவிக்க 10581 என்ற இலவச தொலைபேசி எண்ணையும், 94984 10581 என்ற கைப்பேசி வாட்ஸ் ஆப் எண்ணையும் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

அப்போது அவருடன் அப் பிரிவு ஐ.ஜி.ராதிகா உடனிருந்தாா். ஏடிஜிபி மகேஷ்குமாா் அகா்வால், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் லட்சுமணன் தலைமையிலான தனிப்படையினரை பாராட்டி பரிசு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com