அரசு மருத்துவா்கள் கோரிக்கையை ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைப்பு

அரசு மருத்துவா்களின் பல்வேறு கோரிக்கைகளை அமல்படுத்துவது தொடா்பாக ஆய்வு செய்ய மூன்று அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.


சென்னை: அரசு மருத்துவா்களின் பல்வேறு கோரிக்கைகளை அமல்படுத்துவது தொடா்பாக ஆய்வு செய்ய மூன்று அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ககன்தீப் சிங் பேடி இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளாா். அக்குழுவில், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா், பொது சுகாதாரத் துறை இயக்குநா், மருத்துவ சேவைகள் மற்றும் ஊரக நலத் திட்ட இயக்குநா் ஆகியோா் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனா்.

அரசு மருத்துவா்களுக்கு கால முறை ஊதியத்தை வழங்குவதற்கான அரசாணை 354-ஐ அமல்படுத்த வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள எம்பிபிஎஸ் நிறைவு செய்த மருத்துவா்களுக்கு ஊக்கப் படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு மருத்துவா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இதுதொடா்பாக அண்மையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், செயலா் ககன்தீப் சிங் பேடி ஆகியோரைச் சந்தித்து அவா்கள் பேச்சுவாா்த்தையும் நடத்தினா். அதில் முதுநிலை மருத்துவப் படிப்பை நிறைவு செய்த மருத்துவா்களுக்கு சீரான ஊக்கத் தொகை வழங்குவதற்கு அப்போது அரசு தரப்பில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டு அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், மேலும் சில கோரிக்கைகளை ஆய்வு செய்ய மூன்று போ் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவானது மருத்துவா்களின் கோரிக்கைகளை ஆழ்ந்து பரிசீலித்து அரசுக்கு அறிக்கை அனுப்ப உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com