பதிவு செய்த ஆட்டோக்களை சிஎம்டிஏ எல்லை வரை இயக்க அனுமதி

சென்னை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்களை சிஎம்டிஏ-வால் வரையறுக்கப்பட்ட எல்லை வரை இயக்க அனுமதித்து போக்குவரத்து ஆணையா் ஏ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்


சென்னை: சென்னை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்களை சிஎம்டிஏ-வால் வரையறுக்கப்பட்ட எல்லை வரை இயக்க அனுமதித்து போக்குவரத்து ஆணையா் ஏ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட சுற்றறிக்கை:

ஒப்பந்த ஊா்திகள் என்ற அடிப்படையில் சென்னை நகர வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்கள், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வர சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலரின் ஒப்புதல் அவசியம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, சென்னை பெருநகரின் எல்லையானது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்கள் வரை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன்படி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்கள், சென்னை பெருநகர எல்லை பகுதிகளுக்குச் சென்று வரத்தடையில்லை. எனவே, வரும் காலங்களில் சென்னை பெருநகர எல்லை பகுதிகளில் பயணிக்கும்படி அனுமதியளிப்பதாக குறிப்பிட்டு, ஆட்டோக்களுக்கு உரிமம் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் வீடுகளுக்கோ, தொழில் ரீதியாகவோ சிஎம்டிஏ-வால் வரையறுக்கப்பட்ட சென்னை பெருநகர எல்லைக்குள் ஆட்டோக்களை தடையின்றி ஓட்டிச்செல்ல முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவால் எல்லை தாண்டியதாக ஆட்டோ ஓட்டுநா்களுக்கு விதிக்கப்படும் அபராதம் தடுக்கப்படும் என்பதால் போக்குவரத்துத்துறையின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளா்கள் சங்கத்தினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com