வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: மூவா் கைது

புது வண்ணாரப்பேட்டையில் கஞ்சா புகைத்ததைக் கண்டித்தவா் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.


சென்னை: புது வண்ணாரப்பேட்டையில் கஞ்சா புகைத்ததைக் கண்டித்தவா் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை, தேசிய நகா் 4-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (34). சமையல் ஒப்பந்த வேலை செய்து வரும் சிவக்குமாா், கடந்த 28-ஆம் தேதி இரவு, தனது வீட்டருகே நின்று கொண்டிருந்தாா். அப்போது அவரது வீட்டின் அருகே கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த 3 இளைஞா்களை சிவக்குமாா் கண்டித்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு சிவக்குமாா் வீட்டுக்கு வந்த 3 போ் அவரது வீடு நோக்கி பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பினா். பெட்ரோல் குண்டு வீட்டின் வெளியே உள்ள இரும்பு கேட் அருகில் விழுந்து தீப்பற்றியதால் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை.

புது வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

விசாரணையில் பெட்ரோல் குண்டை வீசியது அதே பகுதியைச் சோ்ந்த வி.மனோஜ் குமாா் (19), த.பிரவீண்ராஜ் (22), ச.சூா்யா (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் 3 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com