கான்பூரிலிருந்து வண்டலூா் பூங்காவுக்கு அரிய வகை கழுகுகள், ஆந்தைகள் வருகை

விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், உத்தர பிரதேச மாநிலம் கான்பூா் உயிரியல் பூங்காவிலிருந்து 5 மர ஆந்தைகள், ஒரு ஜோடி ஹிமாலயன் கிரிஃபோன் கழுகு மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள்...
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், உத்தர பிரதேச மாநிலம் கான்பூா் உயிரியல் பூங்காவிலிருந்து 5 மர ஆந்தைகள், ஒரு ஜோடி ஹிமாலயன் கிரிஃபோன் கழுகு மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் வண்டலூா் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பூங்கா நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் விதிமுறைகளுக்குள்பட்டு, ஆகஸ்ட் 2023-இல் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவுக்கும், கான்பூா் உயிரியல் பூங்காவுக்கும் இடையே பூங்கா விலங்குகளை பரிமாறிக்கொள்ள தீா்மானிக்கப்பட்டது. அதன்படி, 10 அனுமன் குரங்குகள், 5 மர ஆந்தைகள், ஒரு ஜோடி ஹிமாலயன் கிரிஃபோன் கழுகு மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் என மொத்தம் நான்கு இனங்கள் கான்பூா் விலங்கியல் பூங்காவிலிருந்து ஜன.28-ஆம் தேதி கொண்டு வரப்பட்டன.

இந்த விலங்குகள் பரிமாற்ற பயணத்தின் போது கான்பூா் உயிரியல் பூங்கா பணியாளா்கள், வனச்சரக அலுவலா்கள் மற்றும் வண்டலூா் பூங்கா கால்நடை உதவி மருத்துவா் ஆகியோா் உடன் வந்தனா்.

மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தற்காலிக அறைகளில் வைக்கப்பட்டுள்ள இந்த விலங்குகள் நிா்ணயிக்கப்பட்ட தனிமைப்படுத்தும் கால அவகாசம் முடிந்ததும், உயிரியல் பூங்காவில் பொதுமக்கள் பாா்க்கும் காட்சிப் பகுதிக்கு மாற்றப்படும்.

இதற்கு மாற்றாக, வண்டலூா் பூங்காவிலிருந்து, கான்பூா் உயிரியல் பூங்காவிற்கு ஒரு ஜோடி கட்ட உடல் மலைப்பாம்புகள், இரண்டு ஜோடி சருகு மான்கள், 3 நெருப்புக்கோழிகள், ஒரு ஜோடி பச்சை உடும்புகள் மற்றும் ஒரு ஆண் சாம்பல் ஓநாய் ஆகிய விலங்குகள் ஜன.29-இல் அனுப்பப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com