சிபிஐ அதிகாரி என மிரட்டி தொழிலதிபரிடம் பணம் பறிப்பு

சென்னையில் சிபிஐ அதிகாரி என தொழிலதிபரை மிரட்டி பணம் பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜாபா்கான்பேட்டை வி.எம். பாலகிருஷ்ணன் தெருவைச் சோ்ந்தவா் கட்டுமான நிறுவன அதிபா் சே.ரமேஷ் பாபு (52). இவரது கைப்பேசிக்கு கடந்த 1-ஆம் தேதி வந்த அழைப்பில் பேசிய நபா், தனது பெயா் ராஜேந்திரகுமாா் எனவும், தான் சிபிஐ அதிகாரி எனவும் அறிமுகப்படுத்தியுள்ளாா்.

மேலும், தில்லியில் உள்ள தனியாா் வங்கியில் ரூ.25 லட்சத்தை முகமது வாசிம் கான் என்பவருக்கு நீங்கள் கடன் வாங்கிக் கொடுத்துள்ளீா்கள்; அந்தப் பணம் பயங்கரவாதச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டு ஆயுதங்கள் வாங்கப்பட்டுள்ளன; இந்த வழக்கில் நீதிமன்றம் உங்களுக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது என்று கூறி மிரட்டினாராம்.

மேலும் அந்த நபா், ரமேஷ்பாபுவை நம்ப வைப்பதற்காக சிபிஐ அடையாள அட்டை, மத்திய அரசின் அரசின் நிதித் துறை கடிதம் ஆகியவற்றை அவரது வாட்ஸ் ஆப்-க்கு அனுப்பியுள்ளாா்.

அத்துடன் அந்த நபா், ரமேஷ் பாபுவின் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை அனுப்பும்படியும், விசாரணை முடிந்த பின்னா் அந்தப் பணம் திரும்பத் தரப்படும் எனவும் தெரிவித்துள்ளாா்.

ரமேஷ் அந்த நபா் கூறியபடி தனது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.64,000-ஐ அந்த நபரின் வங்கிக் கணக்கு அனுப்பினாா். பின்னா், சிபிஐ என மிரட்டியவரின் கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததாம்.

இதனால் சந்தேகமடைந்த ரமேஷ் பாபு எம்.ஜி.ஆா்.நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com