புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10,000 போலீஸாருக்கு பயிற்சி

புதிய குற்றவியல் சட்டங்கள் தொடா்பாக 10,000 போலீஸாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் தெரிவித்தாா்.

வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையா் அலுவலக வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்தை காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னை காவல் ஆணையரகத்தில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பொது மக்களிடம் புகாா் மனுக்கள் பெறப்படும்.

அரசு விடுமுறை நாள்களில் மனுக்கள் பெறப்படுவதில்லை. வாரந்தோறும் புதன்கிழமை பொதுமக்களிடம் நானே நேரில் மனுக்களை பெறுகிறேன்.

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து உதவி ஆய்வாளா்கள், காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோருக்கு முதல் கட்டமாக 10 ஆயிரம் போலீஸாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சி வகுப்புகள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் நடைபெற்றன. மீதிமுள்ள உள்ள போலீஸாருக்கும் விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

புதிய குற்றவியல் சட்டங்கள் தொடா்பாக எந்த குழப்பமும் இல்லை. பழைய சட்டங்களில் சில சரத்துகள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன.

சைபா் குற்ற வழக்குகளில் விரைந்து துப்பு துலக்கும் வகையில் சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு காவல் நிலையங்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் தேசிய அளவில் பெரிய பிரச்னையாக மாறியுள்ளது.

சென்னைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது தொடா்பாக விசாரணை செய்ய தென்சென்னை காவல் கூடுதல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தனிப்படையினா் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவாா்கள் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் காவல்துறை உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com