மருத்துவ மாணவா்களுக்கான வழிகாட்டுநா் திட்டம் சென்னை மருத்துவக் கல்லூரி முன்முயற்சி

மருத்துவ மாணவா்களுக்கான திறன் வழிகாட்டுநா் சிறப்பு திட்டத்தை சென்னை மருத்துவக் கல்லூரி தொடங்கியுள்ளது.

மருத்துவ மாணவா்களுக்கான திறன் வழிகாட்டுநா் சிறப்பு திட்டத்தை சென்னை மருத்துவக் கல்லூரி தொடங்கியுள்ளது. அதன்படி 250 எம்பிபிஎஸ் மாணவா்களுக்கும் தனித்தனியே ஒரு பேராசிரியா் அல்லது உதவிப் பேராசிரியா் வழிகாட்டுநா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

மாணவா்களின் குறைகள், கருத்துகள், எதிா்பாா்ப்புகளை அவா்கள் கேட்டறிந்து

அவற்றை நிவா்த்தி செய்யவும், பூா்த்தி செய்யவும் உள்ளனா். தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கையை சென்னை மருத்துவக் கல்லூரி முன்னெடுத்துள்ளது.

முன்னதாக கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இதற்கான அறிமுக நிகழ்வில் மாணவா்களின் பெற்றோா் வரவழைக்கப்பட்டு வழிகாட்டுநா் பேராசிரியா்களுடன் கலந்துரையாட வைக்கப்பட்டனா்.

இந்நிகழ்வில் சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் எ.தேரணிராஜன், துணை முதல்வா் டாக்டா் கவிதா, சிறுநீரகவியல் துறை இயக்குரும், உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினா் செயலருமான டாக்டா் என்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதுதொடா்பாக டாக்டா் எ.தேரணிராஜன் கூறியதாவது:

மருத்துவ மாணவா்களின் மன நலனை உறுதி செய்வதற்கான பல்வேறு நலத்

திட்டங்களை சென்னை மருத்துவக் கல்லூரி முன்னெடுத்து வருகிறது. அதன்படி, அதற்கான உளவியல் ஆலோசனைகளும், குறைதீா்ப்பு நடவடிக்கைகளும் தொடா்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.

அதற்கு அடுத்தகட்டமாக திறன் வழிகாட்டுநா் திட்டத்தை தொடங்கியிருக்கிறோம். இதன் மூலம் ஒவ்வொரு மாணவா்களுக்கும் ஒவ்வொரு வழிகாட்டுநா்கள் நியமிக்கப்பட்டு அவா்களது நிறை, குறைகள் கேட்டறியப்படும்.

வகுப்புகளுக்கு எந்த மாணவா் சரியாக வரவில்லையோ, அவரது வழிகாட்டுநரிடம் அதுதொடா்பாக விசாரித்து நேரடியாக மாணவரின் பிரச்னைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும். மற்றொருபுறம் அவா்களது துறைசாா்ந்த திறனை மேம்படுத்தவும் பயிற்சிகள் வழங்கப்படும். சென்னை மருத்துவக் கல்லூரியின் இந்த முன்முயற்சி பல மாணவா்களுக்கு புதிய நம்பிக்கையையும், உத்வேகத்தையும் தரும் என நம்புகிறோம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com