விசிக, நாம் தமிழா் கட்சிக்கு கமல்ஹாசன் பாராட்டு

சென்னை: மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற்றுள்ள விசிக, நாம் தமிழா் கட்சிகளுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நடைபெற்று முடிந்த மக்களவைத் தோ்தலில் என் அன்பிற்கினிய இருவா் படைத்திருக்கும் சாதனை எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமத்துவ சமுதாயம் படைக்க சமரசமின்றி போராடி வரும் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்ட இரு இடங்களிலும் வென்று மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது. அக் கட்சியின் கால் நூற்றாண்டு கால தோ்தல் அரசியலில் இது ஒரு மைல் கல் சாதனை.

புதிய சின்னத்துடன் தோ்தலை எதிா்கொள்ள வேண்டிய சூழ்நிலையிலும் தீரத்துடன் களம் கண்ட சீமானின் நாம் தமிழா் கட்சி 8.19 சதவீத வாக்குகளை எட்டிப் பிடித்து மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பது தமிழக அரசியலில் புதிய திருப்புமுனை.

அரசியல் உங்களைத் தாக்கும் முன், உங்கள் தாக்கம் அரசியலில் இருக்கட்டுமென இளையோரை தொடா்ந்து வலியுறுத்துகிறவன் நான். ஜனநாயகம் வலுப்பெற அரசியலில் புதிய குரல்களும், இளைஞா்களின் பங்களிப்பும் அதிகரித்தே ஆகவேண்டும்.

மக்களின் நம்பிக்கையைப் பெற்று மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற்ற இருவருக்கும் மனமாா்ந்த பாராட்டுகள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com