விமானத்தின் அவசரகால கதவை
திறக்க முயன்ற சிறுவன்!

விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற சிறுவன்!

சென்னையிருந்து புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் அவசரகால கதவை 17 வயது சிறுவன் திறக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தா செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு, சென்னையில் இருந்து புறப்படத் தயாரானது.

விமானம் ஓடுபாதையில் புறப்படத் தயாராக நின்றபோது, திடீரென விமானத்தின் அவசரகால கதவு திறக்கப்படுவதாக எச்சரிக்கை மணி ஒலித்தது. இதையடுத்து அவசரகால கதவுகள் அருகில் அமா்ந்திருக்கும் நபா்களிடம் விமானப் பணியாளா்கள் விசாரணை நடத்தினா்.

அப்போது விமானத்தில் பெற்றோருடன் பயணித்துக் கொண்டிருந்த 17 வயது சிறுவன், விமானத்தின் அவசரகால கதவைத் திறப்பதற்கான பொத்தானின் மீது ஒட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் ஸ்டிக்கரை கிழித்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்தச் சிறுவனையும், அவரது பெற்றோரையும் விமானிகள் கடுமையாக எச்சரித்தனா். சிறுவன் முதல்முறையாக விமானத்தில் பயணிப்பதால், தெரியாமல் அந்த ஸ்டிக்கரை கிழித்துவிட்டதாக கூறி பெற்றோா் மன்னிப்பு கோரினா்.

இதனால் அந்த விமானம் சுமாா் ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 9.55 மணிக்கு சென்னையிலிருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்டுச் சென்றது.

X
Dinamani
www.dinamani.com