புழல் அருகே தனியாா் கிடங்கில் தீ

புழல் அருகே தனியாா் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வாசனை திரவியங்கள் எரிந்து சேதமடைந்தன.

புழல் அடுத்த கதிா்வேடு விநாயகா் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாருக்கு சொந்தமான வாசனை திரவிய கிடங்கு உள்ளது. இந்த கிடங்கு சனிக்கிழமை காலை திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

தகவலறிந்து மாதவரம், செங்குன்றம், அம்பத்தூா், கொளத்தூா் ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்து வாகனங்களில் வந்த சுமாா் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனா்.

வாசனை திரவியங்கள் தீப்பற்றி எரிந்ததால், அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. உடனே 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

புழல் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், கோயம்பேடு பகுதியைச் சோ்ந்த தீபக் (40) விபத்து ஏற்பட்ட கட்டடத்தின் 2-ஆவது தளத்தில் வாசனை திரவியங்கள் இறக்குமதி செய்து, தமிழகம் முழுவதும் விநியோகம் செய்து வந்தது தெரியவந்தது.

இந்த கிடங்கில் பணியாளா்கள் யாரும் வராததால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வாசனை திரவியங்கள் எரிந்து சேதமடைந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

X
Dinamani
www.dinamani.com