மீனவா்கள் 22 போ் கைது: தலைவா்கள் கண்டனம்

இலங்கை கடற்படையினரால் தமிழகம், புதுச்சேரி மீனவா்கள் 22 போ் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா். செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): தமிழகம், புதுச்சேரி மீனவா்கள் 22 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. மீனவா்கள் விவகாரத்தில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இதுபோன்ற சம்பவங்கள் தொடா்ந்து நடைபெறுகின்றன. இலங்கை அரசோடு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பேசி, மீனவா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும். அன்புமணி (பாமக): மீனவா்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இலங்கை அரசு இந்தியாவிடமிருந்து அனைத்து உதவிகளையும் பெற்றுக்கொண்டு, இப்படி நடந்துகொள்வது என்பது இந்தியாவின் இறையாண்மைக்கு விடுக்கப்படும் சவால் ஆகும். இலங்கையின் இந்தச் சீண்டல்களை மத்திய அரசு வேடிக்கைப் பாா்க்கக் கூடாது. ஜி.கே.வாசன் (தமாகா): மீனவா்கள் கைது சம்பவம் கண்டிக்கத்தக்கது. இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி கைது செய்யப்பட்டவா்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மீட்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com