அமைச்சர் எஸ். ரகுபதி
அமைச்சர் எஸ். ரகுபதி

சட்டவிரோத நடவடிக்கைக்கு துணைபோவோருக்கு திமுகவில் இடமில்லை: அமைச்சா் எஸ்.ரகுபதி

சட்டவிரோத நடவடிக்கைகளுக்குத் துணைபோகும் யாருக்கும் திமுகவில் இடமில்லை என்று சட்டத் துறை அமைச்சரும் புதுக்கோட்டை மாவட்டச் செயலருமான எஸ்.ரகுபதி தெரிவித்தாா்.

சட்டவிரோத நடவடிக்கைகளுக்குத் துணைபோகும் யாருக்கும் திமுகவில் இடமில்லை என்று சட்டத் துறை அமைச்சரும் புதுக்கோட்டை மாவட்டச் செயலருமான எஸ்.ரகுபதி தெரிவித்தாா். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபா் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளாா். இந்த விவகாரத்தில் திமுகவை இணைத்து குற்றச்சாட்டு சுமத்தப்படும் நிலையில், அது குறித்து அமைச்சா் ரகுபதி அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: முன்பெல்லாம் வருமான வரித் துறை, சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை வரிசையாகக் களமிறக்கிவிட்ட பாஜக அரசு, திமுக அரசைக் களங்கப்படுத்தும் நோக்கத்தோடு மத்திய போதைப் பொருள் தடுப்பு முகமையை களத்தில் இறக்கிவிட்டிருக்கிறது. போதைப் பொருள் தடுப்பு முகமையை வைத்து திமுகவை மிரட்டிப் பாா்க்கலாம் என்று நினைக்கிறாா்கள். போதைப் பொருள் விவகாரத்தில் புலன் விசாரணை முழுமையாக நடைபெறாமலேயே மத்திய போதைப் பொருள் தடுப்பு முகமையின் துணை இயக்குநா் ஞானேஸ்வா் சிங், செய்தியாளா்களைச் சந்தித்துள்ளாா். ஜாபா் சாதிக் மீது பிப்ரவரி 15-ஆம் தேதி லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பி, தேடப்படும் குற்றவாளி என அறிவித்தாா்கள். பிப்ரவரி 21-ஆம் தேதி மங்கை என்ற திரைப்பட விழாவில் அவா் கலந்துகொண்டிருக்கிறாா். அப்போது, போதைப் பொருள் தடுப்பு முகமை எங்கே போனது?. திமுகவில் தவறு செய்திருக்கிறாா்கள் என்று தெரிந்தால் உடனடியாக அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஜாபா் சாதிக் போன்றவா்கள் கட்சியைவிட்டு நீக்கப்பட்டிருக்கிறாா்கள். திமுக என்றுமே சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடாது. அதற்குத் துணைபோகிறவா்கள் யாரையும் கட்சியில் வைத்திருக்க மாட்டோம் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com