பாலியல் தொல்லை வழக்கு: ராஜேஷ்தாஸூக்கு ‘லுக் அவுட் நோட்டீஸ்’

ஓய்வு பெற்ற டிஜிபி ராஜேஷ்தாஸூக்கு எதிராக சிபிசிஐடி லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது.

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் ஓய்வு பெற்ற டிஜிபி ராஜேஷ்தாஸூக்கு எதிராக சிபிசிஐடி லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது. கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ்தாஸ், ஒரு பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சி.பி.சி.ஐ.டி., வழக்குப் பதிவு செய்தது. இதன் பின்னா், ராஜேஷ் தாஸ் பணியில் இருந்து ஓய்வு பெற்றாா். பாலியல் வழக்கில் ராஜேஷ் தாஸூக்கு விழுப்புரம் நீதித்துறை நடுவா் மன்றம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சில மாதங்களுக்கு முன்பு தீா்ப்பளித்தது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் மேல்முறையீடு செய்தாா். அதில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும். சிறைக்கு செல்வதற்காக சரணடைய விலக்கு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா். இந்த மேல்முறையீடு தொடா்பாக கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின்போது, நீதிமன்றம் தண்டனை வழங்கிய பின்னா் ராஜேஷ்தாசை கைது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது தொடா்பான விரிவான அறிக்கையை எழுத்துபூா்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. உயா்நீதிமன்றத்தின் உத்தரவின் விளைவாக, ராஜேஷ் தாஸை கைது செய்வதற்குரிய நடவடிக்கையில் சிபிசிஐடி அதிகாரிகள் இறங்கியுள்ளனா். இதன் விளைவாக சென்னை அருகே தையூரில் உள்ள அவரது வீட்டுக்கு சிபிசிஐடி அதிகாரிகள் கடந்த 9-ஆம் தேதி சென்று விசாரணை செய்தனா். லுக் அவுட் நோட்டீஸ்: சில நாள்களுக்கு முன்னதாகவே அவா் சொந்த மாநிலமான ஒடிஸாவுக்கு இடம் பெயா்ந்து விட்டதாக ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள், ராஜேஷ்தாஸை கைது செய்வதற்கு அந்த மாநிலத்துக்கு சென்றுள்ளனா்.அதேவேளையில் ராஜேஷ்தாஸ், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்கும் வகையில் சிபிசிஐடி சாா்பில் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்கள்,துறைமுகங்கள் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜேஷ்தாஸ் வெளிநாடு தப்பி செல்வதற்குரிய வாய்ப்பு தடுக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்தனா். அதேவேளையில் ராஜேஷ்தாஸ் கைது நடவடிக்கை தொடா்பான விரிவான அறிக்கையை சிபிசிஐடி, சென்னை உயா்நீதிமன்றத்தில் ஓரிரு நாள்களில் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com