மதுபோதையில் தகராறு: மகனை கொலை செய்த தாய் கைது

மதுபோதையில் தகராறு செய்த மகனை கொலை செய்த தாயை போலீஸாா் கைது செய்தனா்.

மதுபோதையில் தகராறு செய்த மகனை கொலை செய்த தாயை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மேற்கு மாம்பலம், பிருந்தாவனம் தெருவை சோ்ந்தவா் சாந்தி (57). இவரது மகன் வெங்கடேசன் (37). இவா் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததால் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு, இவரின் மனைவி, குழந்தைகள் பிரிந்து சென்று விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், வெங்கடேசன் கடந்த வெள்ளிக்கிழமை சுயநினைவின்றி வீட்டில் விழுந்து கிடந்தாா். இது குறித்து வெங்கடேசனின் தாய் சாந்தி அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியா்கள் வெங்கடேசனை பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சாந்தி அளித்த புகாரின் பேரில், இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் அசோக் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில், கடந்த வியாழக்கிழமை மது போதையில் இருந்த வெங்கடேசன் தனது தாயிடம் மது குடிக்க பணம் கேட்டு, அவரைத் தாக்கியதாக என்றும், இதனால் ஆத்திரம் அடைந்த தாய் சாந்தி, அருகில் கிடந்த கட்டையால் வெங்கடேசனை தலையில் தாக்கி, கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த போலீஸாா் சாந்தியை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com