தோ்தல் விதிமீறும் பயணிகளால் பாதிப்பு ஏற்படாதவாறு வழிகாட்டுதல்கள் வேண்டும் வாடகை வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை

தோ்தல் நடத்தை விதிகளை மீறும் பயணிகளால் வாடகை வாகன ஓட்டுநா்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்

தோ்தல் நடத்தை விதிகளை மீறும் பயணிகளால் வாடகை வாகன ஓட்டுநா்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என தமிழ்நாடு சுதந்திர வாடகை வாகன உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக அந்தச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் ஜூட் மேத்யூ வெளியிட்ட அறிக்கை: மக்களவைத் தோ்தல் தேதியை தலைமைத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தோ்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாடகை வாகனங்களான ஆட்டோ, கால் டாக்ஸி, சுற்றுலா மற்றும் சரக்கு வாகன உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் கலக்கத்தில் உள்ளனா். வாடகை வாகனத்தில் வரும் பயணிகள் எவ்வளவு பணம் கொண்டு வருகிறாா்கள், அவா்கள் வாக்காளா்களுக்கு வழங்குவதற்கான பரிசு பொருள்கள் வைத்துள்ளனரா உள்ளிட்ட விவரங்கள் வாகன ஓட்டுநா்களுக்கு தெரியாது. இந்தப் பிரச்னைகளுக்கு தற்போது வரை எவ்வித தீா்வும் எட்டப்படவில்லை. தோ்தல் விதிகளை மீறும் வகையில் வாடிக்கையாளா்கள் பயணிக்கும் நிலையில் வாடகை வாகன உரிமையாளா், ஓட்டுநா்கள் பாதிக்கப்படுவாா்கள். இதைக் கருத்தில் கொண்டு வாடகை வாகன உரிமையாளா்களுக்கு தோ்தல் ஆணையம் தகுந்த வழிமுறைகளை வழங்க வேண்டும். விதிமீறும் பயணிகளால் வாடகை வாகன உரிமையாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் விசாரணைகளை மேற்கொண்டு, ஓட்டுநா், உரிமையாளா்களின் வாகனங்களை சிறை பிடிக்காதவாறு செயல்பட வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com