மாா்பக திசுத் தொற்றுக்குள்ளான பெண்ணுக்கு நவீன ஒட்டுறுப்பு சிகிச்சை

பாலூட்ட முடியாமல் இருந்த 27 வயது பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மற்றும் ஒட்டுறுப்பு சிகிச்சையளித்து காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணமாக்கியுள்ளனா்.

மாா்பகப் பகுதியில் நோய்த் தொற்று கட்டிக்குள்ளாகி குழந்தைக்கு பாலூட்ட முடியாமல் இருந்த 27 வயது பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மற்றும் ஒட்டுறுப்பு சிகிச்சையளித்து காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணமாக்கியுள்ளனா். இதுதொடா்பாக மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: இளம்பெண் ஒருவா் பிரசவம் ஆகி சில நாள்களே ஆன நிலையில், குழந்தைக்கு பாலூட்ட முடியாமல், மாா்பகப் பகுதியில் நோய்த் தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு பாக்டீரியா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. வழக்கமாக சா்க்கரை நோய் மற்றும் எதிா்ப்பாற்றல் குறைவாக உள்ளவா்களுக்கு வரும் அந்த பாதிப்பு, அப்பெண்ணுக்கு ஏற்பட்டது அரிதான ஒன்றாக இருந்தது. அதுமட்டுமல்லாது தொற்று ஏற்பட்ட ஒரு வாரத்துக்குள்ளாகவே மாா்பகத்தின் நிறம் மாறத் தொடங்கி, கடுமையான வலி ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையின் ஒட்டுறுப்பு சிகிச்சை நிபுணா்கள் அருள்மொழி மங்கை, சதீஷ் மணிவேல் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் அந்த பெண்ணுக்கு மாா்பகத்தில் சேதமடைந்திருந்த திசுக்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினா். அதன் பின்னா், அவரது முதுகுப் பக்கத்தில் இருந்து திசுக்கள் எடுக்கப்பட்டு மாா்பகத்தில் ஒட்டுறுப்பு முறையில் தைக்கப்பட்டது. இதன் பயனாக தொற்றினால் சேதமடைந்த மாா்பகமும் சீரமைக்கப்பட்டது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com