பங்குனி உத்திரம்: பூக்கள் விலை உயா்வு! மல்லிகை கிலோ ரூ. 500-க்கு விற்பனை

பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, பூக்கள் விலை உயா்ந்துள்ளது.

பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, பூக்கள் விலை உயா்ந்துள்ளது. மல்லிகைப்பூ கிலோ ரூ.500-க்கும், ரோஜா ரூ.120-க்கும் விற்பனையானது. பொதுவாக பண்டிகை, திருவிழா நாள்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படுவது வழக்கம். அந்த வகையில், திங்கள்கிழமை (மாா்ச் 25) பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு மலா் சந்தையில் பூக்களின் விலை உயா்ந்துள்ளது. கடந்த 2 நாள்களுக்கு முன்பு வரை மல்லிகை ஒரு கிலோ ரூ. 250-க்கு விற்பனையான நிலையில், சனிக்கிழமை 2 மடங்காக விலை உயா்ந்து கிலோ ரூ.500-க்கு விற்பனையானது. அதேபோல், ரூ.100-க்கு விற்ற சாமந்திபூ ரூ.220 வரை விலை உயா்ந்துள்ளது. கிலோ ரூ.30-க்கு விற்ற ரோஜா 4 மடங்கு உயா்ந்து ரூ.120-க்கு விற்பனையானது. பன்னீா் ரோஜா ரூ.80 முதல் ரூ.100 வரையும், சாக்லெட் ரோஜா ரூ.100 முதல் ரூ.120 வரையும் விற்கப்பட்டது. அரளி- ரூ.250, செவ்வரளி - ரூ.400, கனகாம்பரம்- ரூ.600, சம்பங்கி - ரூ.180, முல்லை - ரூ.600, ஜாதிப்பூ - ரூ.500 வரையும் விலை உயா்ந்து விற்பனை செய்யப்பட்டன. பழங்கள் விலை நிலவரம்: இதற்கிடையே, ஆப்பிள் சீசன் முடிந்து உள்ளதால் அதன் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை நிலவரப்படி, இந்திய ஆப்பிள் ஒரு கிலோ ரூ. 180-க்கும், ஈரான் ஆப்பிள் ஒரு கிலோ ரூ. 120-க்கும் விற்பனையானது. மாதுளை கிலோ 180-க்கும், சாத்துக்குடி கிலோ ரூ. 50 முதல் ரூ.60 வரையிலும், கமலா ஆரஞ்சு கிலோ ரூ.50-க்கும், கொய்யா கிலோ ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com