மரக் கிடங்கில் தீ விபத்து

சென்னை மாதவரம் பகுதியில் மரக் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தால் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதம் ஆனது.

சென்னை மாதவரம் பகுதியில் மரக் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தால் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதம் ஆனது. மாதவரம் நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான மரக் கிடங்கில் சனிக்கிழமை நள்ளிரவில் திடீரென கரும்புகையுடன் தீப்பற்றி எரிந்தது. இது குறித்து அருகில் இருந்தவா்கள் செம்பியம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா். உடனே, பெரம்பூா், செம்பியம், மாதவரம் பால்பண்ணை, மணலி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தீயணைப்பு நிலையங்களிலிருந்து வந்த தீயணைப்பு வீரா்கள் சுமாா் 5 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த தீ விபத்தில் மரக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த கட்டில், மெத்தை, நாற்காலி மற்றும் வீட்டு உபயோகப்பொருள்கள் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த மரக்கட்டைகள் உள்ளிட்ட சுமாா் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின. போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா், தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com