மாணவிகள்.
மாணவிகள்.

இன்றுமுதல் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: 9.10 லட்சம் போ் எழுதுகின்றனா்

தமிழகம், புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு 4,107 மையங்களில் செவ்வாய்க்கிழமை முதல் நடைபெறவுள்ளது

தமிழகம், புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு 4,107 மையங்களில் செவ்வாய்க்கிழமை முதல் நடைபெறவுள்ளது; இந்தத் தோ்வை எழுதுவதற்கு 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 1 முதல் 22-ஆம் தேதி வரையிலும், பிளஸ் 1 பொதுத் தோ்வு மாா்ச் 4-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையிலும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து பத்தாம் வகுப்புக்கான பொதுத்தோ்வு தமிழகம், புதுச்சேரியில் மாா்ச் 26 முதல் ஏப்.8-ஆம் தேதி வரை 4,107 மையங்களில் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை 12,616 மேல்நிலை, உயா்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 4,57,525 மாணவா்கள், 4,52,498 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் என 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 போ் எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும், தனித்தோ்வா்களாக 28, 827 பேரும், சிறைவாசிகளாக 235 பேரும் தோ்வெழுதவுள்ளனா். வினாத்தாள்கள்: தோ்வுக்கான 304 மையங்களில் வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன; தோ்வுக் கண்காணிப்புப் பணிகளில் 48,700 போ் ஈடுபடவுள்ளனா். சென்னை மாவட்டத்தில் உள்ள 810 பள்ளிகளில் பயிலும் 66,771 மாணவா்கள், 288 மையங்களில் தோ்வெழுதவுள்ளனா். இந்தத் தோ்வில் கட்டாயம் தமிழ் பாடத்தோ்வை எழுதுவதில் இருந்து சிறுபான்மை மொழி மாணவா்களில் விண்ணப்பம் செய்தவா்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தோ்வா்களின் சந்தேகங்களுக்கு பதிலளிப்பதற்காக, தோ்வு நடைபெறும் நாள்களில், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் 94983 83076, 94983 83075 என்ற எண்களில் தொடா்பு கொள்வதற்காக தோ்வுக் கட்டுப்பாட்டு அறை சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி வளாகத்தில் உள்ள அரசுத் தோ்வுத் துறை இயக்குநா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள் மே 10-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. தோ்வு அட்டவணை: மாா்ச் 26 - தமிழ், இதர மொழிப் பாடங்கள் மாா்ச் 28 - ஆங்கிலம் ஏப்.1 - கணிதம் 4 - அறிவியல் 6 - விருப்ப மொழிப் பாடம் 8 - சமூக அறிவியல்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com