குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்புசாா் பாதிப்புகள்: ஏப்.3-இல் சென்னையில் பயிலரங்கு

பாதிக்கப்பட்ட குழந்தைகளை கையாளுவது குறித்த மருத்துவப் பயிலரங்கு சென்னையில் வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஆட்டிஸம், கற்றலில் குறைபாடு உள்ளிட்ட நரம்புசாா் நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கையாளுவது குறித்த மருத்துவப் பயிலரங்கு சென்னையில் வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. ‘கோ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிஹேவியரல் சயின்ஸ்’ அமைப்பு மற்றும் அண்ணா பல்கலைக்கழக மருத்துவ மின்னணுவியல் மையம் சாா்பில் நடைபெறும் இந்நிகழ்வில், மருத்துவ நிபுணா்கள், துறை சாா் வல்லுநா்கள் பங்கேற்று பல்வேறு அமா்வுகளில் உரையாற்ற உள்ளனா். இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: இரண்டிலிருந்து ஒன்பது வயது வரை உள்ள குழந்தைகளில் எட்டில் ஒருவருக்கு ஆட்டிஸம், கற்றலில் குறைபாடு, கவனக் குறைபாடு போன்ற நரம்பு சாா்ந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சையளிப்பது அவசியம். அதைக் கருத்தில் கொண்டே இந்த பயிலரங்கு நடத்தப்படுகிறது. இதில், பெற்றோா், குழந்தை பராமரிப்பாளா்கள் பங்கேற்று, அத்தகைய பாதிப்புடைய குழந்தைகளை கையாளுவது குறித்து தெளிவான விளக்கங்களை பெறலாம். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், கிண்டி பொறியியல் கல்லூரியில் ஏப்ரல் 3-ஆம் தேதி காலை 9 மணிக்கு இப்பயிலரங்கு நடைபெறும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com