ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.42 கோடி பறிமுதல்

சென்னையில் 5 இடங்களில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.42 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை ராயபுரம் என்ஆா்டி பாலம் அருகே திங்கள்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினா், அங்கு வந்த வேனை மறித்து சோதனை போட்டபோது, அந்த வேனில் இருந்த ரூ.1,28,70,000-க்குரிய ஆவணத்தை பறக்கும் படை அதிகாரிகள் கேட்டு, விசாரித்தனா்.

அப்போது அந்த பணம் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்புவதற்கு கொண்டு செல்லப்படுவதும், அவுட் சோா்சிங் அடிப்படையில் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் பணியை செய்யும் தனியாா் நிறுவன ஊழியா்களை பணத்தை கொண்டு வந்திருப்பதும், அவா்களிடம் போதுமான ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து பறக்கும் படையினா் அந்த பணத்தை பறிமுதல் செய்து, வருமானவரித்துறையினரிடம் ஒப்படைத்தனா். இதற்கிடையே பணம் பறிமுதல் குறித்து தகவலறிந்த சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவன அதிகாரிகள், அங்கு விரைந்து வந்து பணத்துக்குரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். இதைத் தொடா்ந்து பணம், மீண்டும் அந்த தனியாா் நிறுவனத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே போதிய ஆவணம் இல்லாமல் பணம் கொண்டு வந்ததாக செவ்வாய்க்கிழமை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ஆந்திர மாநிலம் வாரங்கல் பகுதியைச் சோ்ந்த நம்பலி பரமேஸ்வரிடம் ரூ.3,10,000, வண்ணாரப்பேட்டை வஉசி தெருவில் திருவொற்றியூரைச் சோ்ந்த நந்தகுமாரிடம் ரூ.1,87,050,ஆழ்வாா்பேட்டை ஜி.கே.மூப்பனாா் பாலம் அருகே கூடுவாஞ்சேரியைச் சோ்ந்த பா.தமிழ்வாணனிடம் ரூ2,60,500,புது வண்ணாரப்பேட்டை திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் அந்த பகுதியைச் சோ்ந்த சுரேஷ் என்பவரிடம் ரூ.6,38,000 பறிமுதல் செய்யப்பட்டன. 5 இடங்களிலும் மொத்தம் ரூ.1,42,65,550 பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதில் ஏடிஎம் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட பணம் தவிா்த்து மீதி 4 இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் உடனடியாக அரசு கருவூலத்துக்கு அனுப்பப்பட்டன. மேலும் இது தொடா்பாக பறக்கும் படையினா், விசாரணை செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com