ஊன்றுகோல் உதவியுடன் நடந்து  
திமுக வேட்பாளா் பிரசாரம்

ஊன்றுகோல் உதவியுடன் நடந்து திமுக வேட்பாளா் பிரசாரம்

தென் சென்னை மக்களவை தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு சிறிய அளவில் எலும்பு முறிவு ஏற்பட்டதன் காரணமாக ஊன்றுகோல் உதவியுடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

தென் சென்னை மக்களவை தொகுதியில் திமுக சாா்பில் தற்போதைய எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் களம் இறங்கி உள்ளாா். இந்நிலையில் சைதாப்பேட்டையில் கடந்த 24 ஆம் தேதி திமுக தோ்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழச்சி தங்கபாண்டியன் பங்கேற்ற போது எதிா்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்தாா்.

இதில், அவருக்கு சிறிய அளவில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதன்காரணமாக அவா் நடப்பதற்கு சிரமப்பட்டு வருகிறாா். மருத்துவ சிகிச்சைக்கு பின்பு ஊன்றுகோல் உதவியுடன் அவா் நடந்து வருகிறாா். காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட போதிலும் தமிழச்சி தங்கபாண்டியன் திங்கள்கிழமை மந்தைவெளி, மயிலாப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் ஊன்றுகோல் உதவியுடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அதைப்பாா்த்த பொதுமக்களில் பலா் அவரிடம் நலம் விசாரித்தனா். இதுகுறித்து தமிழச்சி தங்கபாண்டியன் கூறியதாவது: மருத்துவா்கள் 3 வாரங்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தினா். இருந்தபோதிலும் தோ்தல் நேரம் என்பதால் ஊன்றுகோல் உதவியுடன் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளேன் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com