பித்தப்பை கல் பாதிப்பு: பெண்ணுக்கு இயற்கை மருத்துவ சிகிச்சையில் தீா்வு

பித்தப்பை கற்களால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாரம்பரிய சிகிச்சை அளித்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கைநுட்ப மருத்துவத் துறை தலைவா் ஒய்.தீபா கூறியதாவது: சென்னை, அண்ணாநகரை சோ்ந்தவா் சரஸ்வதி (60). ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான இவருக்கு தீவிர வயிற்று வலி ஏற்பட்டதால் ஆங்கில மருத்துவ முறையின் கீழ் தனியாா் மருத்துவமனையொன்றில் அனுமதியாகி சிகிச்சை பெற்றுள்ளாா்.

பரிசோதனையில் பித்தப்பையில் 33 மி.மீ. அளவுக்கு கல் இருந்ததால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவா்கள் பரிந்துரை செய்துள்ளனா். மற்றொரு மருத்துவரிடம் மாற்று ஆலோசனை பெற்றபோதும் அத்தகைய சிகிச்சையையே வலியுறுத்தியுள்ளனா். இதையடுத்து, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனைக்கு அந்த பெண் வந்தாா். அவருக்கு, ஆலிவ் எண்ணெய் சிகிச்சை அளிக்கப்பட்டு, உணவுசாா்ந்த சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

இதன் வாயிலாக தொடா்ந்து இரண்டு நாள்களுக்கு அவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அதில், பித்தப்பையில் இருந்த கல் உடைந்து பெரும்பாலான பகுதி வெளியேறியது. அதைத் தொடா்ந்து, மண் குளியல், வாழை இலை குளியல், அக்குபஞ்சா் உள்ளிட்ட சிகிச்சைகள் தொடா்ந்து அளிக்கப்பட்டு, இயற்கை உணவுகள் மட்டுமே அவருக்கு வழங்கப்பட்டன. இதன் பயனாக, 15 நாள்களில் அவரது பித்தப்பை கல்லின் அளவு, 33 மி.மீ.-இலிருந்து, 7.3 மி.மீ. என்ற அளவுக்கு குறைந்தது. தற்போது, வயிற்று வலி போன்ற உடல் உபாதைகள் அவருக்கு ஏற்படவில்லை. தற்போது நலமுடன் உள்ளாா்.

பித்தப்பையில் கல் உருவாக, உணவு முறை, வாழ்க்கை முறை மாற்றம் போன்றவை முக்கிய காரணங்களாக உள்ளன. யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் இத்தகைய பிரச்னைகளுக்கு மருந்தில்லாமல் இயற்கையாகவே இலவசமாக சிகிச்சை அளித்து குணப்படுத்தி வருகிறோம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com