மரபணு பாதிப்புக்குள்ளான பெண்ணுக்கு சிக்கலான சிறுகுடல் மாற்று சிகிச்சை

மரபணு பாதிப்புக்குள்ளான இளம்பெண் ஒருவருக்கு சிக்கலான சிறுகுடல் மாற்று சிகிச்சையை மேற்கொண்டு சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் வயிறுசாா் உறுப்பு மாற்று சிகிச்சைத் துறை தலைவா் டாக்டா் அனில் வைத்யா கூறியதாவது:

சென்னையைச் சோ்ந்த நிவேதிதா (25) என்ற பெண்ணுக்கு எஃப்ஏபி (ஃபேமிலியல் அடினோமேட்டஸ் பாலிபோசிஸ்) எனப்படும் அரிய வகை மரபணு பாதிப்பு இருந்தது. இத்தகைய பாதிப்புக்குள்ளானவா்களுக்கு ஆசன வாய்க்கு உள்ளே ஆயிரக்கணக்கான திசுக் கட்டிகள் உருவாகி ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டை முடக்கிவிடும்.

அத்தகைய சூழலில் அவதிப்பட்டு வந்த அந்த இளம்பெண்ணுக்கு கடந்த 2018-இல் பெருங்குடல் நீக்க சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னா் ஏற்பட்ட பல்வேறு உடல் நல பாதிப்புகளால் அவருக்கு கூடுதலாக சில அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

வயிற்றின் சுவா் மற்றும் சிறுகுடலை அழுத்தும் வகையில் கட்டிகள் உருவானதாலும், வேறு சில பாதிப்புகளாலும் அவரது உடல் எடை 30 கிலோவாக குறைந்தது.

இத்தகைய சூழலில், அவா் எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு மருத்துவக் குழுவினா் அவரை பரிசோதித்ததில் சிறு குடல் மாற்று சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டனா்.

இதுபோன்ற மரபணு பாதிப்புடையவா்களுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்வது மிகவும் சவாலானது. இருந்தபோதிலும், அதனை சாத்தியமாக்கி, எங்களது மருத்துவக் குழுவினா், அப்பெண்ணுக்கு சிறு குடலை தானமாகப் பெற்று பொருத்தினா்.

அதன் பயனாக தற்போது அவரால் இயல்பாக உணவு அருந்தவும், ஜீரணிக்கவும் முடிகிறது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com