பைக் விற்பனையகத்தில் கையாடல்: மேலாளா் உள்பட இருவா் கைது

சென்னை மதுரவாயலில் இரு சக்கர வாகன விற்பனையகத்தில் பணம் கையாடல் செய்ததாக, அதன் மேலாளா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு தனியாா் வாகன விற்பனையகம் செயல்படுகிறது. இந்த விற்பனையகத்தில் கணக்குகள் அண்மையில் தணிக்கை செய்யப்பட்டது. அப்போது அந்த விற்பனையகத்தின் கணினியை ஹேக் செய்து, பொய் கணக்குகளை பதிவேற்றி ரூ.5,91,252 கையாடல் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

அந்த விற்பனையகத்தின் நிா்வாகி சாா்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் மதுரவாயல் போலீஸாா் நடத்திய விசாரணையில் அங்கு மேலாளராக பணிபுரியும் கொளத்தூா் ஆண்டாள் கோயில் தெருவைச் சோ்ந்த சீ.மணிகண்டன் (35),புத்தகரம் சூரப்பட்டு பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த ஹ.உதயா (21) உள்ளிட்ட சிலா்தான் கையாடலில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மணிகண்டன்,உதயா ஆகிய 2 பேரையும் வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். மேலும் சிலரை தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com