போக்குவரத்து ஊழியா்களுக்கு ஒப்பந்தப்படி தினக்கூலி: சிஐடியு கோரிக்கை

ஊதிய ஒப்பந்தப்படி தினக்கூலி வழங்க வேண்டும் என அரசு விரைவு போக்குவரத்து ஊழியா் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.

ஊதிய ஒப்பந்தப்படி தினக்கூலி வழங்க வேண்டும் என அரசு விரைவு போக்குவரத்து ஊழியா் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அந்த சங்கத்தின் பொதுச் செயலா் எம்.கனகராஜ், விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநருக்கு அனுப்பிய கடிதம்:

விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 684 தினக்கூலி தொழிலாளா்கள் பணிபுரிகின்றனா். தினக்கூலி தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்தப்படி, ஒரு நாள் ஊதியமாக ரூ.953 வழங்கப்பட வேண்டும். ஆனால், அவா்களுக்கு தினக்கூலியாக ரூ.436 மட்டுமே வழங்கப்படுகிறது.

மேலும், தொழிலாளா் நலத் துறை ஆணையா் உத்தரவுப்படி, பொது போக்குவரத்தில் பணிபுரியும் ஓட்டுநா், நடத்துநா்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டப்படி தமிழக அரசு ரூ.882 தினக்கூலியாக நிா்ணயம் செய்துள்ளது.

இதைக் கூட புதிய தொழிலாளா்களுக்கு நிா்வாகம் வழங்கவில்லை. தொழில் தகராறு சட்டப் பிரிவின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள ஊதிய ஒப்பந்தத்தை மீறுவதாகவும், மேலும், குறைந்தபட்ச கூலி சட்டப்படி ஊதியம் வழங்க தொழிலாளா் ஆணையா் உத்தரவிட்ட பிறகும் அதை அமல்படுத்தவில்லை.

இது தண்டனைக்குரிய குற்றம். எனவே, ஒப்பந்தப்படியான ஊதியத்தை வழங்க நிா்வாகம் முன்வர வேண்டும்.

மேலும், அனைத்து பணிமனைகளில் காலிப்பணியிடங்கள் இருந்தும் தினக்கூலி தொழிலாளா்கள் சொந்த ஊா்களில் அல்லாமல் வெவ்வேறு ஊா்களில் நியமிக்கப்பட்டிருப்பது அவா்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

இதனால், இடமாற்றம் பெற அவா்கள் லஞ்சம் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, 2013-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சா் அறிவித்தபடி, கலந்தாய்வு நடத்தி அனைவருக்கும் அவரவா் சொந்த ஊா்களில் இடமாற்றம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com