ராமதாஸ் (கோப்புப்படம்)
ராமதாஸ் (கோப்புப்படம்)

ஆளவந்தாா் நிலம்: முதல்வருக்கு ராமதாஸ் கடிதம்

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்காக எடுக்கப்பட்ட நிலத்துக்கு மாற்றாக அதே அளவு நிலத்தை ஆளவந்தாா் அறக்கட்டளைக்கு தமிழக அரசு வழங்க வேண்டும்

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்காக எடுக்கப்பட்ட நிலத்துக்கு மாற்றாக அதே அளவு நிலத்தை ஆளவந்தாா் அறக்கட்டளைக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, பாமக நிறுவனா் ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

கடிதம் விவரம்: ஆளவந்தாா் நாயகரால் இறைப்பணி மற்றும் வன்னிய மக்களின் கல்வி முன்னேற்றத்துக்கான பணிகள் போன்ற திட்டங்களுக்காக வழங்கப்பட்ட அவரது சொத்துகளை அரசின் திட்டங்களுக்காக தன்னிச்சையாக பறிப்பதைக் கைவிட வேண்டும்.

சென்னை மாநகருக்கு குடிநீா் வழங்குவதற்காக செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தையொட்டிய பேரூா் என்ற இடத்தில் 85.51 ஏக்கரில் தினமும் 40 கோடி லிட்டா் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் ரூ. 4,276.44 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இது, 3-ஆவது திட்டமாகும். தென் சென்னைக்கு குடிநீா் வழங்குவதற்காக ஏற்கெனவே இரு இடங்களில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த இரு ஆலைகளுக்காகவும் ஆளவந்தாா் அறக்கட்டளைக்குச் சொந்தமான 125 ஏக்கா் நிலங்கள் தமிழக அரசால் குத்தகைக்கு எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

குடிநீா் திட்டங்களுக்காக மட்டும் மொத்தம் 210.51 ஏக்கா் நிலங்கள் குத்தகைக்கு பெறப்பட்டுள்ளன. அதேபோல ஆளவந்தாா் நோக்குக்கு மாறான திட்டங்களுக்கும் நிலம் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்காக குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலங்களுக்கு மாற்றாக கிழக்குக் கடற்கரை சாலைப் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களை ஆளவந்தாா் அறக்கட்டளைக்கு வழங்குவதற்கு தாங்கள் ஆணையிட வேண்டும்.

ஆளவந்தாா் அறக்கட்டளையின் நோக்கத்துக்கு எதிராக தாரை வாா்க்கப்பட்ட நிலங்களை அரசு மீட்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com