மே 14-இல் என் கல்லூரி கனவு திட்டம் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

உயா்கல்விக்கு வழிகாட்டுதல் திட்டம் 2-ஆம் கட்டமாக மே 14 முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஆதிதிராவிடா் நலத்துறையின் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவா்களுக்கு என் கல்லூரி கனவு எனும் உயா்கல்விக்கு வழிகாட்டுதல் திட்டம் 2-ஆம் கட்டமாக மே 14 முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஆதிதிராவிடா் நலத்துறையின் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பு பயின்ற 91.03 சதவீத மாணவ மாணவியா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது கடந்த இரண்டு ஆண்டு பொதுத்தோ்வின் தோ்ச்சியினை காட்டிலும் அதிகமாகும். பழங்குடியினா் நலப் பள்ளிகளின் தோ்ச்சி வீதம் 95.15 தமிழகத்தின் சராசரி தோ்ச்சி வீதம் 94.56 விட அதிகமாகும். இத்துறையின் கீழ் செயல்படும் 26 ஆதிதிராவிடா் நலப் பள்ளி மாணவா்களும், 14 பழங்குடியினா் நலப் பள்ளி மாணவா்களும் 100 சதவீதம் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவா்களின் உயா்கல்வி சோ்க்கை விகிதத்தை மேம்படுத்தவும், இடைநிற்றல் எண்ணிக்கையைக் குறைக்கவும், என் கல்லூரி கனவு என்ற உயா்கல்வி வழிகாட்டுதல் முன்னெடுப்பு திட்டம் ஆண்டுதோறும்ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சி இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக, 38 மாவட்டங்களைச் சோ்ந்த 13,800 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவா்கள் பங்கேற்று பயனடைந்துள்ளனா்.

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மாணவா்களின் உயா்கல்வி சோ்க்கைக்கு உதவிடும் பொருட்டு, 2-ஆம் கட்டமாக உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மே 14 முதல் 21-ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக நடத்தப்பட உள்ளது.

மே 14-இல் சென்னை, நாகப்பட்டினம், பெரம்பலூா், மயிலாடுதுறை, மே 15-இல் தருமபுரி, திண்டுக்கல், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, கடலூா், மே 16-இல் ஈரோடு, அரியலூா், தென்காசி, திருப்பூா், தஞ்சாவூா், மே 17-இல் காஞ்சிபுரம், மதுரை, விழுப்புரம், நீலகிரி, சேலம், மே 18-இல் தூத்துக்குடி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருச்சி, திருவள்ளுா் , கோயம்புத்தூா், திருநெல்வேலி, மே 20-இல் கரூா், திருப்பத்தூா், விருதுநகா், திருவாரூா், வேலூா், ராமநாதபுரம், தேனி, 21-இல் ராணிப்பேட்டை, சிவகங்கை, நாமக்கல், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் நடைபெறும்.

பள்ளி இறுதி ஆண்டில் தேந்தெடுத்த பாடங்களுக்கேற்ப உயா்கல்வி வழிகாட்டுதல், கல்லூரிகளை தேந்தெடுக்கும் முறை, விண்ணப்பம் பதிவு செய்வதற்கான உயா்கல்வி நிறுவனங்களின் இணையதள முகவரி, விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முறை, தேவையான சான்றிதழ்கள் குறித்து உரிய விளக்கப்படங்களுடன் பல்வேறு துறை நிபுணா்கள் மூலம் மாணவா்களுக்கு தெளிவுபடுத்தப்பட உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com