பி.எஸ். எலெக்ட்ரானிக்ஸ் படிப்புக்கு மே 28 வரை விண்ணப்பிக்கலாம்

நான்காண்டு பிஎஸ் எலக்ட்ரானிக்ஸ் படிப்பில் சேருவதற்கு, பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்கள் மே 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் வழங்கப்படும் நான்காண்டு பிஎஸ் எலக்ட்ரானிக்ஸ் படிப்பில் சேருவதற்கு, பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்கள் மே 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்த நான்காண்டுப் படிப்பு பல்வேறு கட்டங்களில் வெளியேறும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. மாணவா்கள் அடிப்படை நிலைச் சான்றிதழ், டிப்ளமோ, பிஎஸ் பட்டம் ஆகியவற்றைப் பெற முடியும். தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் படிப்பு தொழில்துறைக்கு தேவையான திறன்களை வழங்குகிறது.

அனைவருக்கும் கல்வி கிடைக்ககூடிய வகையில் பிஎஸ் எலக்ட்ரானிக்ஸ் கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் தொடங்கப்பட்டது. இந்தப் படிப்பில் 2024-ஆம் மே பருவத்தில் சேருவதற்காக இம்மாதம் 26-ஆம் தேதி வரையில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து பேராசிரியா் போபி ஜாா்ஜ் கூறும்போது, ‘இணையவழியில் பாடங்களைக் கற்பதையும், உரிய ஆய்வக சோதனைகளை பரிசோதிப்பதையும், நேரடியாகத் தோ்வு எழுதுவதையும் இப்பாடத்திட்டம் ஒருங்கிணைக்கிறது. படிக்க ஆா்வமுள்ள எவரும், எங்கிருந்தாலும் உயா்தரமான கல்வியை அணுகும் வகையில் அமைந்துள்ளது’ என்றாா்.

பிஎஸ் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் ஆசிரிய ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் எஸ்.அனிருத்தன் கூறும்போது, ‘ மாணவா்கள் தங்களின் படிப்பைத் தொடரும்போதே உள்ளகப் பயிற்சி அல்லது வேலைவாய்ப்புகளுக்கு தடையின்றி தகுதிப்படுத்திக் கொள்ளும் வகையிலேயே பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன’ என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com