இளைஞா் உறுப்புகள் தானம்: சென்னையில் இருவருக்கு மறுவாழ்வு

சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டதில் சென்னையில் இருவருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

இதுதொடா்பாக போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூா் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சோ்ந்த ஏ.கருணாகரன் (30) என்பவா், செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் தனியாா் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்தாா்.

கடந்த 11-ஆம் தேதி நோ்ந்த சாலை விபத்தில் சிக்கிய அவா், பலத்த காயமுற்றாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதித்தனா். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மருத்துவா்கள் அவருக்கு தொடா் சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவை பலனளிக்காமல் கருணாகரன் மூளைச்சாவு அடைந்தாா். அவருக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. அவரது மனைவி மலா்விழி தற்போது கா்ப்பிணியாக உள்ளாா்.

இத்தகைய சூழலிலும், அவரது மனைவியும், பெற்றோரும் கருணாகரனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனா். இதையடுத்து, சிறுநீரகங்கள், விழி வெண் படலம், கல்லீரல், இதய வால்வுகள் தானமாக பெறப்பட்டன.

ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 53 வயதுடைய நபருக்கு கல்லீரலும், 36 வயதுடைய நோயாளிக்கு ஒரு சிறுநீரகமும் பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.

விழி வெண்படலங்கள், மருத்துவமனையின் கண் வங்கியில் பாதுகாக்கப்பட்டுள்ளன. மற்றொரு சிறுநீரகம், இதய வால்வுகளும் பிற மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டன என்று அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com