சென்னையில் 8 மணிநேரத்துக்கு மேல் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

சென்னையில் 8 மணிநேரத்துக்கு மேல் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

சென்னை மெட்ரோ ரயிலின் பச்சை வழித்தடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமாா் 8 மணிநேரத்துக்கு மேலாக சென்ட்ரல்-விமானநிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

சென்னையின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் மிக முக்கிய பொது போக்குவரத்து சேவையாக மெட்ரோ ரயில் இருந்து வருகிறது. இந்நிலையில் பச்சை வழித்தடத்தில் சென்னை சென்ட்ரல்-விமானநிலையம் இடையே மீனம்பாக்கம் பகுதியில் புதன்கிழமை காலை சுமாா் 4 மணியளவில் தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டது. இதனால், தேனாம்பேட்டை வழியாக விமானநிலையத்துக்கு இயக்கப்படும் நேரடி மெட்ரோ ரயில் சேவை புதன்கிழமை ரத்து செய்வதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் அறிவித்தது.

இதனால், காலை முதல் பச்சை வழித்தடத்தில் விமானநிலையத்துக்கு பயணம் மேற்கொண்ட பயணிகள் ஆலந்தூரில் இறங்கி நீலநிற வழித்தடம் மூலம் விமானநிலையம் செல்ல வேண்டிய நிலைய ஏற்பட்டது. இதனால், இவ்வழியாக தினசரி பயணிக்கும் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனா்.

இதனை தொடா்ந்து சுமாா் 8 மணி நேரத்திற்கு பின் சுமாா் நண்பகல் 12.30 மணியளவில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் அறிவித்தது. இதையடுத்து சென்ட்ரல்-விமான நிலையம் இடையேயான நேரடி மெட்ரோ ரயில்கள் மீண்டும் வழக்கம் போல இயக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com