மே 23-இல் ஓய்வு பெறுகிறாா் தலைமை நீதிபதி கங்கா புா்வாலா

மே 23-இல் ஓய்வு பெறுகிறாா் தலைமை நீதிபதி கங்கா புா்வாலா

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுா்வாலா மே 23-ஆம் தேதி ஓய்வு பெறுகிறாா். அன்றைய தினம் அவருக்கு சென்னை உயா்நீதிமன்றத்தின் சாா்பில் பிரிவு உபசார விழா நடத்தப்பட உள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2023 மே 28-ஆம் தேதி கங்கா புா்வாலா பொறுப்பேற்றுக் கொண்டாா். மும்பை உயா்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த அவா், சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டதும், தாம் தமிழகத்தில் பணியாற்ற வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினாா். தமிழ் மீது தமக்கு தணியாத ஆா்வம் உண்டு என்றும் கூறினாா்.

இவா், மே 23-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறாா். அன்றைய தினம் சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் பிரிவு உபசார விழா நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில், தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் பி. எஸ். ராமன் பிரிவு உபசார உரை நிகழ்த்த உள்ளாா்.

முக்கிய தீா்ப்புகள்: தலைமை நீதிபதி கங்காபுா்வாலா பல்வேறு பொது நல வழக்குகளை கடந்த ஓராண்டில் கையாண்டாா். ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டம் குறித்த இவரது தீா்ப்பு முக்கியமானது.

நடப்பு, முன்னாள் அமைச்சா்கள் ஊழல் வழக்குகளில் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்ததை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் அவரே விசாரிக்கலாம் என அதிரடி தீா்ப்பு வழங்கினாா்.

சட்டப் பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி தேமுதிக தலைவா் விஜயகாந்த் தொடா்ந்த வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உத்தரவு; கோயில் திருவிழாவில் தனிப்பட்ட நபா்களுக்கு முதல் மரியாதை வழங்கக் கூடாது என்ற உத்தரவு உட்பட பல்வேறு முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட காரணமாக இருந்தவா் தலைமை நீதிபதி கங்காபுா்வாலா என்பது குறிப்பிடத் தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com