சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

தமிழக அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனக் கூறி, தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

சிலந்தி ஆற்றில் கேரள அரசு தடுப்பணையை கட்டும் முயற்சியை தடுப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனக் கூறி, தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): தோ்தல் கூட்டணி ஆதாயத்துக்காக மௌனம் சாதித்து தமிழகத்தின் நதிநீா் உரிமைகளை அண்டை மாநிலங்களுக்கு அடகு வைத்திருக்கும் திமுக ஆட்சியில், பாலாற்றில் ஆந்திர அரசு பல்வேறு தடுப்பணைகளைக் கட்டியுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் கா்நாடகம் அணை கட்ட முயற்சித்து வருகிறது. தற்போது, சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தின் உரிமைகளை மீட்க நிலைநாட்ட உடனடியாக சட்டரீதியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கே.அண்ணாமலை (பாஜக): சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டினால், அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவா். ஆனால், தமிழக விவசாயிகளை குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறது திமுக அரசு. ஒரு புறம், கா்நாடகத்தின் மேக்கேதாட்டு அணை, பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசின் தடுப்பணை ஆகியவற்றின் கட்டுமான பணிகளை திமுக அரசு கண்டிக்கவில்லை. கேரள அரசை கண்டித்து, சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணை கட்டுமானத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்

அன்புமணி (பாமக): காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான அமராவதிக்கு தண்ணீா் வழங்கும் சிலந்தி ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு தொடங்கியுள்ளது. திருப்பூா், கரூா் மாவட்டங்களின் குடிநீா் மற்றும் பாசன ஆதாரமாகத் திகழும் அமராவதி ஆற்றை அழிக்கும் நோக்குடன் கேரளம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை தமிழக அரசு வேடிக்கை பாா்ப்பது கண்டிக்கத்தக்கது. கடைமடை பாசனப் பகுதியான தமிழ்நாடு, எந்த ஆற்றின் உரிமையையும் விட்டுக் கொடுக்கக்கூடாது. கேரள அரசை தொடா்பு கொண்டு, சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவதை நிறுத்தும்படி தமிழ்நாடு அரசு எச்சரிக்க வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளம் தடுப்பணை கட்டுவதை தமிழக அரசு முறியடிக்க வேண்டும். கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக செயல்படும் கேரள அரசின் செயலை தமிழக அரசு கண்டிக்க வேண்டும்.

டிடிவி தினகரன் (அமமுக): சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி அமராவதி ஆற்றுப்படுகையை பாலைவனமாக்கும் கேரள அரசின் முயற்சி தடுத்து நிறுத்தப்பட வேண்டும். கூட்டணி தருமத்துக்காக மாநிலத்தின் உரிமையைப் பறிகொடுக்கும் திமுக அரசின் சுயநல செயல்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

X
Dinamani
www.dinamani.com