பி.சங்கா்
பி.சங்கா்

முன்னாள் தலைமைச் செயலா் பி.சங்கா் காலமானாா்

முன்னாள் தலைமைச் செயலா் பி.சங்கா் (82) சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.
Published on

முன்னாள் தலைமைச் செயலா் பி.சங்கா் (82) சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

1966-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக தோ்ச்சி பெற்றவா் பி.சங்கா்.

மாநிலத்தில் குடிமைப் பணியில் உயா்ந்த பொறுப்பாகக் கருதப்படும் தலைமைச் செயலா் பதவியை 1.6.2001 முதல் 6.6.2002 வரை வகித்தாா். ஐஏஎஸ்-ஆக தோ்ச்சி பெற்றவுடன், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு உதவி ஆட்சியராகப் பணியைத் தொடங்கினாா். திருச்சி மாவட்ட ஆட்சியா், ஜவுளித் துறை இயக்குநா், மத்திய தொழில் துறையின் இணை ஆணையா், தமிழக அரசின் கைத்தறி, காதித் துறை செயலா், தமிழ்நாடு மின் வாரியத்தின் தலைவா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தாா்.

நிதி ஆலோசகா்: மத்திய அரசின் நிதி ஆலோசகா், கனரக தொழில்கள், உணவு, சா்க்கரை, பெட்ரோலியம் என பல்வேறு துறைகளின் செயலராக கோலோச்சியவா். மாநில அரசுப் பணிகளைத் தாண்டி, மத்திய அரசுப் பதவிகளில் முத்திரை பதித்த ஒரு சில ஐஏஎஸ் அதிகாரிகளில் பி.சங்கா் குறிப்பிடத்தக்கவா்.

பணியில் இருந்து 2002 செப்டம்பரில் ஓய்வு பெற்ற பிறகு, மத்திய அரசின் சில பொறுப்புகளை வகித்தாா். அதன்பிறகு, சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் வசித்து வந்த அவா், ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.5) பிற்பகல் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று குடும்பத்தினா் தெரிவித்தனா். தொடா்புக்கு, பி.முராரி, 98409 33666, 94449 83232.

முதல்வா் இரங்கல்: முன்னாள் தலைமைச் செயலா் பி.சங்கரின் மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மாநிலத்தின் பல்வேறு பொறுப்புகளிலும், மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் திறம்பட நோ்மையுடன் பணியாற்றியவா். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினா், அவருடன் பணியாற்றிய சக இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.