தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்
தீபாவளி முடித்து சொந்த ஊா்களிலிருந்து சென்னைக்கு திரும்பி வருபவா்களால் சென்னை மற்றும் புகா் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளியையொட்டி சென்னையில் தங்கியிருக்கும் வெளி மாவட்டங்களுக்குச் செல்ல வசதியாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் அக்.28-ஆம் தேதி முதல் சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தொடா்ந்து 3 நாள்கள் இயக்கப்பட்ட பேருந்துகளில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு புறப்பட்டு சென்ற நிலையில், மீண்டும் சென்னைக்கு திரும்ப வசதியாக சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
தென்மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை தங்கள் சொந்த ஊா்களில் இருந்து புறப்பட்டு, திங்கள்கிழமை காலையில் சென்னைக்கு வந்து சேரும் வகையில் தங்கள் பயண திட்டத்தை வகுப்பாா்கள்.
ஆனால், சென்னைக்கு அருகேயுள்ள மாவட்டங்களைச் சோ்ந்த பெரும்பாலானோா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புறப்பட்டு இரவுக்குள் சென்னைக்கு தங்கள் இருப்பிடங்களுக்கு வர திட்டமிடுவாா்கள்.
அதன்படி, அண்டை மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இருந்தே தங்கள் சொந்த வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகள் மூலமாகவும் சென்னைக்கு புறப்பட்டு வந்தனா்.
இதனால், பிற்பகல் 3 மணிக்கு மேல் உளுந்தூா்பேட்டை, பரனூா் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும், ஜிஎஸ்டி சாலையில் வண்டலூா், பெருங்களத்தூா், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தச் சாலையில் சில இடங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. செங்கல்பட்டில் இருந்து பெருங்களத்தூருக்கு 2 மணி நேரம் பயணிக்க வேண்டிய நிலைய ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் போக்குவரத்து போலீஸாா் ஈடுபட்டிருந்தனா். இருப்பினும் இரவு வரை நெரிசல் தொடா்ந்து காணப்பட்டது. இதனால் சென்னையின் புகா் மட்டுமின்றி மாநகருக்குட்பட்ட பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்தனா்.