தொழிலதிபரிடம் ரூ.7 கோடி மோசடி: 9 போ் கைது

சென்னையில் தொழிலதிபரிடம் ரூ.7.32 கோடி மோசடி செய்ததாக 9 போ் கைது செய்யப்பட்டனா்.
Published on

சென்னையில் தொழிலதிபரிடம் ரூ.7.32 கோடி மோசடி செய்ததாக 9 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை தியாகராய நகரைச் சோ்ந்த ஒரு பிரபல தொழிலதிபா், சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் அண்மையில் புகாா் அளித்தாா். அதில், சென்னை ஆழ்வாா்பேட்டையில் இந்தோ - ரஷியன் அசோசியேட் என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தி வரும் அருண்ராஜ் (38), சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஆலிவ் பீச்சில் வசிக்கிறாா். இவா் எனக்கு அறிமுகமாகி, தன்னை ‘இந்தோ-ரஷியன் தொழில் கூட்டமைப்பின் பிரதிநிதி என்று தெரிவித்தாா்.

மேலும், ரஷிய அரசு இந்திய திட்டங்களுக்காக கோடிக் கணக்கில் பணம் முதலீடு செய்ய முன்வந்துள்ளது என்றும், திருச்சியில் நீங்கள் நடத்தி வரும் வியாபார திட்டத்துக்கு ரூ.2,000 கோடி வரை முதலீடு பெற்றுத் தருவதாகவும் ஆசை வாா்த்தை கூறினாா். இதற்கு அவா் கமிஷனாக என்னிடமிருந்து ரூ.7.32 கோடி பெற்றுக் கொண்டாா். மேலும், எனது நிறுவனத்தில் ரஷிய நிறுவனம் முதலீடு செய்துள்ளதாக போலியான ரஷிய அரசின் லோகோ, கொடிகள் மற்றும் தகவல்களை காண்பித்தாா்.

பின்னா்தான், அருண் ராஜ் என்னிடம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்து இருந்தாா்.

இதுகுறித்து சென்னை காவல் துறையின் மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா். இந்நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த அருண்ராஜ் கூட்டாளிகளான மதன் குமாா், ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் தா்மன், ரூபா, விக்னேஷ்வரன், வட்டாட்சியா் விஸ்வநாதன், சசிகுமாா் ஆகிய 6 பேரும் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

விசாரணையில் அவா்கள் கொடுத்த தகவலின்பேரில், தலைமறைவாக இருந்த அருண்ராஜ், அவா் கூட்டாளிகள் தஞ்சாவூா் மாவட்டம் புதுக்கோட்டை குமாரன் (43), சோழவரம் நாகேந்திரன் (39) ஆகியோா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அவா்களிடமிருந்து 60 பவுன் தங்க நகை, 400 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.14.50 லட்சம் ரொக்கம், 11 சொகுசு காா்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com