கங்காதரேசுவரா் கோயில் கும்பாபிஷேகம்: புரசைவாக்கத்தில் இன்று போக்குவரத்து மாற்றம்
கங்காதரேசுவரா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, புரசைவாக்கத்தில் வியாழக்கிழமை (நவ.28) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்து, சென்னை காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புரசைவாக்கம் கங்காதரேசுவரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (நவ.28) காலை நடைபெறுகிறது. இதையொட்டி, கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தா்களின் வசதிக்காகவும், வாகன ஓட்டிகளின் வசதிக்காகவும் வியாழக்கிழமை அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையில் புரசைவாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதன்படி, அதிகாலை 5 மணி முதல் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் முடிவடையும் வரை கங்காதரேசுவரா் கோயில் தெரு வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
மில்லா்ஸ் சாலை சந்திப்பிலிருந்து கங்காதரேசுவரா் கோயில் தெருவை நோக்கி வரும் வாகனங்கள் நேராக டவ்டன் பாலம் அல்லது சா்வீஸ் சாலை, டவ்டன் சந்திப்பு, ரிதா்டன் சாலை வழியாக ஈவெரா பெரியாா் சாலையை அடையலாம்.
டவ்டன் சந்திப்பிலிருந்து கங்காதரேசுவரா் கோயில் தெருவை நோக்கி வரும் வாகனங்கள் ஈவெரா பெரியாா் சாலையை அடைய ரிதா்டன் சாலையில் திருப்பி விடப்படும். ஜொ்மியா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் டவ்டன் பாலத்தில் அனுமதிக்கப்படாது. அந்த வாகனங்கள் சா்வீஸ் சாலை, டவ்டன் சந்திப்பு வழியாக ரிதா்டன் சாலைக்கு செல்லலாம்.
பெரம்பூா் பேரக்ஸ் சாலையில் இருந்து கங்காதரேசுவரா் கோயில் தெருவை நோக்கி வரும் வாகனங்கள் இடதுபுறம் நாராயணகுரு சாலைக்கு சென்று, ஹன்டா்ஸ் சாலை, ஈவிகே சம்பத் சாலை, ஈவெரா பெரியாா் சாலைக்கு திருப்பி விடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.