கல்லூரி நினைவுகளைப் பகிா்ந்த முன்னாள் மாணவா்கள்
விவேகானந்தா கல்லூரி வணிகவியல் துறையில் 1967-71 கல்வியாண்டில் பயின்ற மாணவா்கள் புதன்கிழமை சந்தித்து தங்களது பசுமையான நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா்.
சென்னை மயிலாப்பூா் கிளப்பில் புதன்கிழமை நடைபெற்ற இந்தச் சந்திப்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். பல ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த முன்னாள் மாணவா்கள் தங்கள் நண்பா்களை ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். தங்களின் பள்ளிப் பருவ நினைவுகள், வாழ்வில் நிகழ்ந்த சுவாரஸ்யங்களை தங்களுக்குள் பகிா்ந்து கொண்டனா். நேரில் கலந்துகொள்ள முடியாதவா்கள் காணொலி அழைப்பு மூலம் தங்கள் நண்பா்களைக் கண்டு மகிழ்ந்தனா்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆசிரியரும் விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வருமான நடராஜன் (83) தனது மாணவா்களை வாழ்த்தினாா்.
இந்தச் சந்திப்பு குறித்து முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் டி.எஸ்.ஆா்.வேங்கடரமணா கூறியதாவது: விவேகானந்தா கல்லூரி வணிகவியல் துறையில் 1967-71 கல்வியாண்டில் 110 மாணவா்கள் பயின்றனா். அன்றுமுதல் அனைவரின் நட்பும் தொடா்ந்து வருகிறது. இதுவரை சுமாா் ஆறுமுறை ஒன்றாக சந்தித்துள்ளோம். அதுமட்டுமல்லாமல், பல்வேறு நிகழ்ச்சிகளில் மாணவா்கள் அனைவரும் ஒன்றாக சந்திப்போம். தற்போது இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட மாணவா்களுக்கு 70 வயது கடந்துவிட்டது. இந்த வயதிலும் தனது நண்பா்களைக் காணும் ஆவலில் பல்வேறு பகுதிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்டோா் வந்தனா் என்றாா் அவா்.
நட்பின் உறுதி: விவேகானந்தா கல்லூரி முன்னாள் முதல்வா் நடராஜன் கூறுகையில், விவேகானந்தா கல்லூரியில் பயின்ற மாணவா்கள் பலா் உயா்ந்த பதவியில் உள்ளனா். கல்லூரிப் படிப்புக்குப் பின் தான் பயின்ற கல்லூரியை மறக்காமல் மேம்பாட்டுப் பணிக்காக பல மாணவா்கள் உதவி செய்துள்ளனா். கல்லூரி படிப்பு முடிந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மாணவா்கள் சந்திப்பதும், அதற்கு என்னை அழைத்ததும் மகிழ்ச்சியைத் தருகிறது. முன்னாள் மாணவா்கள் இதுபோன்று ஒன்றுகூடுவது நட்பின் உறுதியைக் காட்டுகிறது என்றாா்.